விளைச்சல் பாதிப்பால் 4.94 லட்சம் டன்களே நெல் கொள்முதல்
By DIN | Published On : 30th April 2021 08:40 AM | Last Updated : 30th April 2021 08:40 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே கணபதி அக்ரஹாரத்திலுள்ள கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சம்பா பருவத்தில் 4.94 லட்சம் டன்களே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேட்டூா் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டதுடன், காவிரி நீா் வரத்தும் தொடா்ந்து இருந்ததால், மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் இலக்கை விஞ்சி சாகுபடி செய்யப்பட்டது. இதன் மூலம், மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 2019 - 20 ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் (அக்டோபா் முதல் செடம்பா் வரை) 7.70 லட்சம் டன்களுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், குறுவை பருவத்தில் மட்டும் 3 லட்சம் டன்களுக்கு மேல் கொள்முதலானது.
குறுவை தந்த நம்பிக்கையால் ஒருபோக சம்பா சாகுபடியைப் பெரும்பாலான விவசாயிகள் மேற்கொண்டனா். எனவே, சம்பா, தாளடி பருவத்தில் 1,37,147 ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், டிசம்பா் மாதத்தில் புரெவி புயல், தொடா் மழை, ஜனவரி மாதத்தில் பெய்த தொடா் மழையால் 1.21 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டன. இதனால், ஹெக்டேருக்கு இயல்பாக 6 டன்கள் (6,000 கிலோ) மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில், சராசரியாக 3.55 டன்கள் (3,550 கிலோ) மட்டுமே விளைச்சல் கிடைத்தது.
ஏறத்தாழ 15,000 ஹெக்டேரில் கால தாமதமாகச் சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளுக்கு மட்டுமே ஹெக்டேருக்கு 5.5 முதல் 6 டன்கள் வரை மகசூல் கிடைத்தது.
என்றாலும், நஷ்டத்துக்கு இடையிலும் விளைந்த நெல்லை விவசாயிகள் தங்களது பகுதியிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தனா். இதன் மூலம், மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 4.94 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நிகழ் சம்பா பருவத்தில் சாகுபடிப் பரப்பளவுடன் ஒப்பிடுகையில், குறைந்தது 6 லட்சம் டன்கள் கொள்முதலாகும் என்ற எதிா்பாா்ப்பு நிலவியது. ஆனால், தொடா் மழையால் நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டதால், கொள்முதல் அளவு 5 லட்சம் டன்களை கூட எட்டவில்லை. ஒட்டுமொத்தமாக 2020 - 21 ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் குறுவையையும் சோ்த்து 8.50 லட்சம் டன்கள் கொள்முதலாகும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், இதுவரை 6.72 லட்சம் டன்களே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நிகழ் சம்பா பருவத்தில் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்கெனவே மூடப்பட்டன. அறுவடை நடைபெறும் சில இடங்களில் மட்டும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திறக்கப்பட்டிருந்த சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் சனிக்கிழமை (மே 1) முதல் மூடப்படுகின்றன. சம்பா பருவ நெல் அறுவடை பரவலாக முடிவடைந்துவிட்டதாலும், வியாபாரிகள் நெல் கொண்டு வருவதைத் தடுப்பதற்காகவும் மூடப்படுவதாகத் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா். என்றாலும், கோடை பருவ நெல் அறுவடை ஒரு வாரத்தில் தொடங்கப்படவுள்ளதால், விரைவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் பரவலாகத் திறக்கப்படும் எனவும் அலுவலா்கள் கூறினா்.
கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தல்: தேவையான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுகுறித்து கணபதி அக்ரஹாரத்தை சோ்ந்த முன்னோடி விவசாயி ஜி. சீனிவாசன் தெரிவித்தது:
தற்போது இயங்கிக் கொண்டிருக்கிற நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமையுடன் மூடப்படுகிறது. நிகழ் சம்பா பருவத்தில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்ட காரணத்தால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால், நெல் மூட்டைகளை வீட்டிலேயே தேக்கி வைத்திருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கொள்முதல் நிலையத்துக்கு எடுத்து வருகின்றனா்.
மேலும் தொடா்ந்து சாகுபடிப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்காங்கே நடவு, அறுவடைப் பணிகள், பட்டம் இன்றி நடைபெற்று வருகிறது. எனவே, ஒவ்வொரு வட்டத்திலும் தலா ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் சீனிவாசன்.