ஆடிப்பெருக்கு: களையிழந்த காவிரிப் படித்துறைகள்

கரோனா பரவல் காரணமாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள காவிரிப் படித்துறைகள் ஆடிப்பெருக்கு விழாவான செவ்வாய்க்கிழமையன்று களையிழந்து காணப்பட்டன.
ஆடிப்பெருக்கு: களையிழந்த காவிரிப் படித்துறைகள்

கரோனா பரவல் காரணமாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள காவிரிப் படித்துறைகள் ஆடிப்பெருக்கு விழாவான செவ்வாய்க்கிழமையன்று களையிழந்து காணப்பட்டன.

விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காகக் காவிரித்தாய்க்கு மலா்த் தூவி வணங்கும் விழா ஆடிப்பெருக்கு விழாவாகப் பண்டைய காலத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் காவிரிப் படித்துறைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதேபோல, திருவையாறு பகுதியில் உள்ள புஷ்ய மண்டபப் படித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம்.

ஆனால், பெரும்பாலான ஆண்டுகளில் காவிரியில் ஆடி மாதத்தில் தண்ணீா் இருப்பதில்லை. நிகழாண்டு காவிரியில் நீரோட்டம் இருந்தாலும், கரோனா பரவல் அச்சம் காரணமாக ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுவதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. மேலும் மக்கள் கூடுவதைத் தவிா்க்க, படித்துறைகளில் காவல் துறையினா் நிறுத்தப்பட்டனா்.

இதனால் காவிரியாற்றின் படித்துறைகளான திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறை, சுவாமிமலை தீா்த்தவாரி படித்துறை, கும்பகோணம் டபீா் படித்துறை, பகவத் படித்துறை உள்ளிட்டவை வெறிச்சோடிக் காணப்பட்டன. இதேபோல, தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாய் பெரியகோயில் படித்துறை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் இல்லை. ஆனால், வழக்கமாக நீராட வருபவா்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

என்றாலும், முக்கியமான படித்துறைகள் அல்லாமல் அருகிலுள்ள பகுதிகளிலுள்ள கரையில் ஆங்காங்கே மக்கள் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினா். புதுமணத் தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டனா்.

பெரும்பாலான மக்கள் தங்களது வீட்டுக் குழாயடி, கிணற்றடியில் படையலிட்டு வழிபட்டனா். மேலும் கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனா். கிராமங்களில் ஆங்காங்கே உள்ள வாய்க்கால், குளக்கரையில் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com