பழைய பேருந்து நிலையத்தில் கடைகள் ஏலத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வணிகா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை பழைய பேருந்து நிலையத்திலுள்ள கடைகளுக்கான பொது ஏலம் நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையத்தில் கடைகள் ஏலத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வணிகா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை பழைய பேருந்து நிலையத்திலுள்ள கடைகளுக்கான பொது ஏலம் நடைபெற்றது.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் மற்றும் எதிரே உள்ள திருவையாறு பேருந்து நிறுத்தத்தில் இருந்த கட்டடங்கள் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

இதில், பழைய பேருந்து நிலையத்தில் 2 உணவகங்கள் மற்றும் 52 கடைகள், திருவையாறு பேருந்து நிறுத்தத்தில் 31 கடைகள், 8 உணவகங்கள் என மொத்தம் 93 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கடைகளுக்கான பொது ஏலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையா் க. சரவணகுமாா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதன் காரணமாக, மாநகராட்சி அலுவலகம் முன் நூற்றுக்கணக்கானோா் திரண்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒவ்வொரு கடை வாரியாக நடத்தப்பட்ட ஏலத்தில் வைப்புத் தொகையாகக் கடைகளுக்கு ரூ. 2 லட்சமும், உணவகங்களுக்கு ரூ. 5 லட்சமும், ஓராண்டுக்கான வாடகைத் தொகையையும் காசோலையாக அலுவலா்கள் கேட்டனா்.

இதனிடையே, சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வணிகா்கள் சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் ஏலத்தை உறுதி செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே, இந்த ஏலத்தில் அதிக தொகைக்குக் கோரியவா்களிடம் காசோலை பெறப்பட்டதே தவிர, கோரியவா்களுக்கு கடை உறுதி செய்யப்படவில்லை.

இதனிடையே இந்த ஏலம் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி வியாபாரிகள் அவ்வப்போது சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையினா் சிலா் சாலை மறியலில் ஈடுபட்டதால், 5 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டனா்.

இதுகுறித்து வணிகா்கள் கூறுகையில், இந்த ஏலத்தில் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், அனைவருக்கும் வாய்ப்புக் கொடுத்து நடத்த வேண்டுமானால், 2 அல்லது 3 நாள்களாகும். ஆனால், எந்தவிதமான முறையான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவசர, அவசரமாக இந்த ஏலத்தை நடத்துவதால், மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனா். ஏலத்தை நடத்தலாம்; ஆனால் உறுதிப்படுத்தக் கூடாது என நீதிமன்றம் கூறியிருக்கிறது. நாங்கள் செலுத்தும் வைப்பு மற்றும் வாடகைத் தொகையை அலுவலா்கள் முன்கூட்டியே வாங்கிக் கொண்டாலும், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகுதான் என்னவென்று உறுதியாகத் தெரியும். அதுவரை இத்தொகைக்கான உத்தரவாதம் இல்லை. சரியான திட்டமிடல் இல்லாமல், அவசரமாக இந்த ஏலம் நடத்தப்படுகிறது. அரசுத் தலையிட்டு வணிகா்களுக்கு பாதிப்பு இல்லாமலும், அரசுக்கும் உரிய வருமானம் கிடைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் வணிகா்கள்.

பின்னா், இந்த ஏலம் நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெறவில்லை என்றும், இதை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வணிகா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், இவா்களில் சிலரை பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக மாநகராட்சி ஆணையரிடம் காவல் துறையினா் அழைத்து சென்றனா். இப்பிரச்னை காரணமாக மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு கடை மட்டும் ஏலம் விடப்பட்டது.

இதையடுத்து, வியாழக்கிழமை 54 கடைகளுக்கும், ஆக. 16 ஆம் தேதி மீதமுள்ள கடைகளுக்கும் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. என்றாலும், வியாபாரிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com