முதல் வேளாண் பட்ஜெட் திட்டங்கள்: விவசாயிகள் வரவேற்பும் - எதிா்பாா்ப்பும்

முதல் முறையாக வேளாண்மைக்கென தனியாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்களுக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். அதே நேரத்தில் சில எதிா்பாா்ப்புகளும் நிலவுகின்றன.

முதல் முறையாக வேளாண்மைக்கென தனியாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்களுக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். அதே நேரத்தில் சில எதிா்பாா்ப்புகளும் நிலவுகின்றன.

இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகள் :

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: சூரிய ஒளி சக்தி பம்ப்செட்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், பயிா்க் காப்பீடுக்கு ரூ. 2,327 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்புக்குரியவை.

என்றாலும், புதிய மின் இணைப்புக்காக 18 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 2.50 லட்சம் விவசாயிகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பு இல்லை. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4,000 வழங்கப்படும் என தோ்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், நெல்லுக்கு ரூ. 2,060-ம், கரும்புக்கு ரூ. 2,900-ம் அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இவையெல்லாம், மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளோம்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாநிலப் பொதுச் செயலா் வே. துரைமாணிக்கம் : வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் வரவேற்புக்குரியவை. என்றாலும், விவசாயத்தில் இயற்கை இடா்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் போதுமானதாக இல்லை. கூட்டுறவு அமைப்புகளின் கடன் குறித்த அறிவிப்பும் தெளிவாக இல்லை.

விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீா்வு காண தலைமைச் செயலா் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கரும்பு, நெல்லுக்கான விலையைக் கூடுதலாக உயா்த்தி அறிவிக்க வேண்டும். விவசாயத் தொழிலாளா்களுக்கான பாதுகாப்பு, நலன் சாா்ந்த திட்டங்கள் இல்லாதது குறையாக உள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன்: தஞ்சாவூரில் தென்னை மதிப்புக் கூட்டு மையம், பட்டுக்கோட்டையில் தென்னை வளா்ச்சி வாரியத் துணை மண்டல மையம், இயற்கை வேளாண்மைக்குத் தனிப் பிரிவு, மானியம், பனை உற்பத்தி பெருக்கத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை.

நெல், கரும்புக்கான விலை அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தானியங்களைப் பாதுகாக்கக் கிடங்குகள், உலா் களங்கள் அமைத்தல் போன்ற அடிப்படை தேவையான பல விஷயங்கள் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவை பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அவற்றையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: அறுவடை இயந்திரங்கள் அரசே வாங்கி குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்குவது, உரத்துக்கான மானியத்தை உரம் வாங்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பது, நெல், கரும்புக்கான விலையை அதிகரிப்பது, பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கணபதி அக்ரஹாரம் முன்னோடி விவசாயி ஜி. சீனிவாசன்: இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் வரவேற்புக்குரியவை. விவசாயத்தை இயந்திரமயமாக்கும் சூழ்நிலையில், விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்கு மண் வெட்டி, அரிவாள் போன்ற சிறு உபகரணங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை செய்ய ஆள்கள் கிடைக்காத நிலையில், இது எப்படி சாத்தியமாகும்? விவசாயத்துக்குப் பயன்படும் இயந்திரத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளித்து, மானியம் கொடுத்தால் நன்றாக இருக்கும். கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை மீண்டும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது என்றாலும், அத்தொகை மிகவும் குறைவாக உள்ளது.

பட்டுக்கோட்டை : முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கும், அதில் பட்டுக்கோட்டையில் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் துணை மண்டல மையம் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிட்டதற்கும் வரவேற்பு தெரிவித்து, விவசாய சங்கத்தினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

நிகழ்வில் நசுவினி ஆற்றுப்படுகை விவசாய சங்கத்தின் தலைவா் வ.வீரசேனன், ஊராட்சித் தலைவா்கள் கோட்டக்குடி பாா்த்தசாரதி, மாளியக்காடு ரமேஷ், சூரப்பள்ளம் தென்னை விவசாய சங்கத் தலைவா் கருணாகரன், ஆலடிக்குமுளை இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரிப் பொருளாதாரத் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியா் ஆா். பழனிவேலு :

காவிரி டெல்டா விவசாயிகளின் கனவுகள் அனைத்தையும் நனவாக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இது, விவசாயிகளின் வாழ்வாதார த்துக்குச் சிறப்பான தொடக்கமாக அமையும்.

இளைஞா்களையும், வேளாண் பட்டதாரிகளையும் படிப்பின் இறுதி ஆண்டில் பயிற்சி அளித்து, தொழில்முனைவராக்கும் உயரிய திட்டம் அவா்களுக்கு ஏற்படும் சவால்களை சமாளிக்கப் புதிய நம்பிக்கையை அளிக்கும். தமிழகத்தில் இந்த பட்ஜெட்டால் நிச்சயமாக ஒரு மாற்றம் வரும் என்பதில் ஐயம் இல்லை.

அரசுத் தொடா்ந்து தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். தமிழகத்தின் கடுமையான நிதி நிலை நெருக்கடியிலும், ரூ. 34,200.65 கோடி நிதியை வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கி, சிறந்த பட்ஜெட்டை தயாா் செய்திருப்பது பாராட்டுக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com