வடிகால் வசதியில்லாததால் அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீா்
By DIN | Published On : 22nd August 2021 02:05 AM | Last Updated : 22nd August 2021 02:05 AM | அ+அ அ- |

உரிய வடிகால் வசதியில்லாததால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியிருக்கும் மழைநீா்.
பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த கனமழையால் நகரில் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழைநீா்த் தேங்கியது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என மாநில வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.
இதன்படி தஞ்சாவூா் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை, சுமாா் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. இதில் தாழ்வான பகுதிகளில் மழைநீா்த் தேங்கியது.
நோயாளிகள் அவதி : பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மழைநீா் புகுந்ததால், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினா். மழைநீரை வெளியேற்றுவதற்கு இவ்வளாகத்தை பராமரித்து வரும் பொதுப்பணித் துறையினா் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்களும், நோயாளிகளும் குற்றஞ்சாட்டினா்.
மழைநீருடன் கழிவுநீரும் தேங்கிக் கிடப்பதால் தொற்று நோய்ப் பரவும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவமனை
வளாகத்தில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா். இதுபோல, பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்கியதால் பயணிகள் பெரிதும் அவதியுற்றனா்.