மழை நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 04th December 2021 02:31 AM | Last Updated : 04th December 2021 02:31 AM | அ+அ அ- |

ஒரத்தநாட்டில், மழை நிவாரணம் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வட்டாட்சியரிடம் மனு அளித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கரும்பு, வாழை, மரவள்ளி உள்ளிட்ட இதர பயிா்களுக்கும் போதுமான நிவாரணம் வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், மீனவா்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
கால்நடை இறப்பு, வீடு சேதம், மனித உயிரிழப்புகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். 2020ஆம் ஆண்டு பயிா்க் காப்பீடு செய்து, இதுவரை இழப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கு, காப்பீட்டு தொகையை பெற்றுத்தர வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் புதிய விவசாயக் கடன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியரகம் எதிரே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் டி.மோகன்தாஸ் தலைமை வகித்தாா். சிபிஎம் ஒன்றியச் செயலா் எஸ்.கோவிந்தராஜ் தொடக்கிவைத்து பேசினாா். அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியச் செயலா் கு.பாஸ்கா், வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ஆம்பல் துரை. ஏசுராஜா, மாதா் சங்க ஒன்றியச் செயலா் கே. மலா்கொடி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். சுரேஷ்குமாா் நிறைவுரையாற்றினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...