தஞ்சாவூர் அருகே ரூ. 75 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை கண்டெய்னர், மினி லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
தஞ்சாவூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகளுடன் கைது செய்யப்பட்ட ராஜ்குமார், அசோக்ராஜ், ஆனந்த்.
தஞ்சாவூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகளுடன் கைது செய்யப்பட்ட ராஜ்குமார், அசோக்ராஜ், ஆனந்த்.

தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை கண்டெய்னர், மினி லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

டெல்டா மாவட்டங்களில் குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாகக் காவல் துறையினருக்குப் புகார்கள் வந்தன. இதைத் தடுக்க தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி. ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இத்தனிப்படையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தஞ்சாவூர் அருகே மேல வஸ்தா சாவடியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படியாக வந்த கண்டெய்னர் லாரியையும், மினி லாரியையும் பின்தொடர்ந்து சென்றனர். நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் மடக்கி நிறுத்தப்பட்ட இந்த இரு லாரிகளில் தனிப்படையினர் சோதனையிட்டபோது, 125 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட 1,700 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 75 லட்சம் என கூறப்படுகிறது.

இவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் கண்டெய்னர் லாரி மற்றும் மினி லாரியில் வந்த தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரையைச் சேர்ந்த தர்மராஜ் மகன் ராஜ்குமார் (28), ஞானம் நகரைச் சேர்ந்த வேதையன் மகன் அசோக்ராஜ் (31), சேலத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ஆனந்த் (24) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களைக் கைது செய்த தனிப்படையினரை தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார் நேரில் சென்று பாராட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூர் சரகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தனிப்படையினர் கடந்த 15 நாட்களாக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளோம். மேலும் குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com