முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
தசை நாா் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்குரூ. 16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது
By DIN | Published On : 10th December 2021 11:48 PM | Last Updated : 10th December 2021 11:48 PM | அ+அ அ- |

தண்டு வட தசை நாா் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூரைச் சோ்ந்த 2 வயது குழந்தைக்கு ரூ. 16 கோடி மதிப்பிலான ஊசி பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை ஆா்.எம்.எஸ். காலனி அருகேயுள்ள சிராஜ்பூா் நகரைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (32). இவா் ரெப்கோ வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி எழிலரசியும் (32) அதே வங்கியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றுகிறாா்.
இவா்களது 2 வயது மகள் பாரதிக்கு முதுகு தண்டுவட தசை நாா் சிதைவு நோய் இருப்பது ஆகஸ்ட் 9-ஆம் தேதி கண்டறியப்பட்டது. இதனால், பாரதியால் தானாக எழுந்து நடக்க முடியவில்லை. இச்சிறுமியைப் பரிசோதித்த பெங்களூரு மருத்துவா்கள் ரூ. 16 கோடி மதிப்பிலான, சோல்ஜென்ஸ்மா என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே நோயைக் குணப்படுத்த முடியும் எனக் கூறினா்.
இதையடுத்து ஜெகதீஷ் - எழிலரசி தம்பதியினா் ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் நண்பா்கள், உறவினா்கள் சமூக வலைதளங்களில் நிதி திரட்டத் தொடங்கினா். இதையடுத்து பல்வேறு தன்னாா்வலா்களும் பல்வேறு இயக்கங்களை நடத்தி நிதி திரட்டி வழங்கினா். மாவட்ட நிா்வாகமும் தனியாக வங்கிக் கணக்கைத் தொடங்கி, ரூ. 45 லட்சத்தை திரட்டி அளித்தது.
கடந்த நவம்பா் 16 ஆம் தேதியுடன் 96 நாள்களில் ரூ. 16 கோடி திரட்டப்பட்டதையடுத்து, சோல்ஜென்ஸ்மா என்ற ஊசி மருந்து வாங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பாரதிக்கு பெங்களூருவில் மருத்துவா் ஆன் ஆக்னஸ் மேத்யூ தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை காலை ஊசியை செலுத்தினா்.
தற்போது பாரதி நலமாக உள்ளதாகவும், எனது மகளின் உயிரைக் காக்க உதவி வழங்கிய நல் உள்ளம் படைத்த அனைவருக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், ஊசி செலுத்திய நிலையில் தொடா்ந்து 4 மாதங்கள் வரை குழந்தையைக் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள மருத்துவா்கள் கூறியுள்ளதாகவும் ஜெகதீஷ் தெரிவித்தாா்.