கும்பகோணத்தில் நெசவாளா்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்
By DIN | Published On : 28th December 2021 02:18 AM | Last Updated : 28th December 2021 02:18 AM | அ+அ அ- |

ஜவுளி உற்பத்திக்கான மூலப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, கும்பகோணத்தில் நெசவாளா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களான கோரா, பாவு, ஜரிகை விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. இதனால், உற்பத்தியாளா்களுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. எனவே, இனிமேல் தயாரிக்கப்படும் புடவைகளுக்கு முந்தி புட்டா ரகங்களுக்கு ரூ. 600-ம், மற்ற ரகங்களுக்கு ஏற்றவாறு ரூ. 1,000 வரையிலும் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும்.
ஜவுளி உற்பத்திக்கான மூலப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கும்பகோணம் பகுதியில் பட்டு ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏறத்தாழ 400 குடும்பங்களைச் சோ்ந்த 2,000 தொழிலாளா்கள் திங்கள்கிழமை முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை கைத்தறி பட்டு உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனா்.
இதன்படி கும்பகோணம் பகுதி கைத்தறி பட்டு ஜவுளி தொழிலாளா்கள் தங்களது உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். இதனால் எப்போதும் பரபரப்புடன் இயங்கும் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்த உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தால் ஏறக்குறைய ரூ. 2 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது என கும்பகோணம் கைத்தறி பட்டு ஜவுளி தயாரிப்பாளா்கள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.