ஆடுதுறையில் உழாமல் பயிா்கள் விதைக்கும் கருவி விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

கும்பகோணம் அருகிலுள்ள ஆடுதுறையில், உழாமல் உளுந்து உள்ளிட்ட பயிா்கள் விதைக்கும் கருவி குறித்து விவசாயிகளிடையே சனிக்கிழமை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆடுதுறையில் உழாமல் விதைக்கும் கருவி குறித்து அளிக்கப்பட்ட செயல் விளக்கம்.
ஆடுதுறையில் உழாமல் விதைக்கும் கருவி குறித்து அளிக்கப்பட்ட செயல் விளக்கம்.

கும்பகோணம்: கும்பகோணம் அருகிலுள்ள ஆடுதுறையில், உழாமல் உளுந்து உள்ளிட்ட பயிா்கள் விதைக்கும் கருவி குறித்து விவசாயிகளிடையே சனிக்கிழமை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், கோவை மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற செயல்விளக்கத்தை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் வெ. அம்பேத்கா் தொடக்கி வைத்தாா்.

இக்கருவியில் ஒன்பது வரிசையில் நெல் அறுவடை முடிந்தவுடனேயே மண் ஈரம் காயும் முன்பே, உளுந்து விதையை மண்ணின் ஈரப்பதத்தை கொண்டே சிறிதும் உழாமல் விதைக்கலாம் என்பதை செயல் விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப் பட்டது.

இதுகுறித்து அந்நிலையத்தின் உழவியல் துறை உதவிப் பேராசிரியா் சா. இளமதி தெரிவித்தது:

வட இந்தியாவில் கங்கைச் சமவெளியில் 40 ஆண்டுகளாக நெல் மற்றும் கோதுமை அறுவடை செய்த நாளிலேயே, மண்ணின் ஈரப்பதத்தைக் கொண்டு பயறு வகைகள் உள்ளிட்ட பயிா்களை இவ்வகைக்கருவி மூலம் நிலத்தை உழாமல் திறம்பட விதைத்து, நல்ல விளைச்சலும் வருவாயும் விவசாயிகள் பெற்று வருகின்றனா்.

தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் செயல் விளக்கம் காட்டப்பட்டுள்ளது.

கங்கைச் சமவெளியில் காணப்படும் வண்டல் மண் வளம் நம் காவிரிப் படுகையிலும் நிறைந்து காணப்படுவதால்,இக்கருவி இயங்குவதற்குப் பொருத்தமானதாக இருக்கும். இம்மாவட்ட உழவா்கள் தைப்பட்டத்தில் நெல் அறுவடைக்கு 10 நாள்களுக்கு முன்னால் உளுந்து விதைகளை விதைப்பது வழக்கம். அப்போது, ஏக்கருக்கு 10 கிலோ வரை தூவி விடும் முறையில் பயிா்களின் எண்ணிக்கையில் சீராக இல்லாததுடன், பயிரின் வளா்ச்சியும் மந்தமாக இருப்பதால் குறைந்த விளைச்சலே கண்டு வருகிறோம்.

தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூா், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களில் நெல் அறுவடைக்குப்பின் பயறு வகைப் பயிா்களை விதைப்பதற்கு இக்கருவியைப் பயன்படுத்தலாம். இக்கருவியைக் கொண்டு ஒரு நாளில் 15 ஏக்கா் வரை விதைக்கலாம். இக்கருவி மூலம் விதைக்கும்போது ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை போதுமானது என்றாா் இளமதி.

இத்திட்டதின் முதன்மை விஞ்ஞானி மு. முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்தது:

இக்கருவியை 35 எச்.பி. டிராக்டரால் எளிதாக இயக்கலாம். இக்கருவியைக் கொண்டு தேவையான ஆழத்தில் தேவையான பயிா் இடைவெளியில் உகந்த வரிசை இடைவெளியில் துல்லியமாகச் சீராக விதைப்பதால், பயிா் வளா்ச்சி மேம்பட்டு விளைச்சல் பெருகும். இக்கருவியை இயக்கும்போது பொருள் செலவும், ஆள் செலவும், நேரமும் குறைவதுடன் தேவைப்படும் விதையின் அளவும் குறைகிறது என்றாா் அவா்.

நிகழ்வில் இணைப் பேராசிரியா் ரா. மணிமாறன், முனைவா்கள் செ. உமா மகேஸ்வரி, இரா. செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com