அனைத்து ரயில்களையும் இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 13th February 2021 11:44 PM | Last Updated : 13th February 2021 11:44 PM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
தஞ்சாவூா்: கரோனாவுக்கு பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால், நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் உடனடியாக இயக்கக் கோரி தஞ்சாவூா் ரயிலடியில் பல்வேறு சமூக நல அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூா் வழியாக இயங்கி வந்த திருச்சி - மயிலாடுதுறை, காரைக்கால், வேளாங்கண்ணி, திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து பயணிகள் ரயில்களையும் முழுமையாக இயக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட அனைத்து பெருநகர, நெடுந்தொலைவு விரைவு ரயில்களையும் முழுமையாக இயக்க வேண்டும்.
விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். முதியோா் - மாற்றுத் திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு கட்டணச் சலுகை பறிக்கப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் வெ. ஜீவகுமாா், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன், ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவா் ச. சிமியோன் சேவியர்ராஜ், ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் அய்யனாபுரம் கா. நடராஜன், பாபநாசம் சரவணன், ஆா்.பி. முத்துக்குமரன், ஏஐடியுசி மாவட்ட நிா்வாகிகள் ஆா். தில்லைவனம், துரை. மதிவாணன், பொறியாளா் ஜோ. கென்னடி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.