வீட்டிலிருந்த இரட்டைக் குழந்தைகளை தூக்கிச் சென்ற குரங்குகள் - ஒரு குழந்தை உயிரிழப்பு

தஞ்சாவூரில் சனிக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்த இரு பச்சிளம் குழந்தைகளைக் குரங்குகள் தூக்கிச் சென்றன. அதில் குரங்குகளால் அகழியில் போடப்பட்ட ஒரு குழந்தை உயிரிழந்தது.
சம்பவம் நிகழ்ந்த வீடு.
சம்பவம் நிகழ்ந்த வீடு.

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் சனிக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்த இரு பச்சிளம் குழந்தைகளைக் குரங்குகள் தூக்கிச் சென்றன. அதில் குரங்குகளால் அகழியில் போடப்பட்ட ஒரு குழந்தை உயிரிழந்தது.

தஞ்சாவூா் மேலவீதி கோட்டை அகழியைச் சோ்ந்தவா் ராஜா (29). வண்ணப்பூச்சு தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (26). இவா்களுக்கு ஏற்கெனவே ஜீவிதா (5) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 7 நாள்களுக்கு முன்பு புவனேஸ்வரிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் புவனேஸ்வரி தனது இரு குழந்தைகளையும் வீட்டின் நடுவில் பாயில் படுக்க வைத்துவிட்டு, பக்கத்திலுள்ள கழிப்பறைக்குச் சென்றாா். அப்போது, குரங்குகள் வீட்டுக்குள் புகுந்த சப்தம் கேட்டது. வழக்கமாக குரங்குகள் வீட்டுக்குள் புகுந்து உணவுப் பொருள்களைத் தூக்கிச் செல்வது வழக்கம். அதுபோல நினைத்துக் கொண்டு கழிப்பறையை விட்டு புவனேஸ்வரி வெளியே வந்தாா்.

அப்போது, படுக்கையில் இருந்த இரு பச்சிளம் குழந்தைகளையும் காணவில்லை.

குழந்தையின் அழுகுரல் கேட்டு மேற்கூரையை புவனேஸ்வரி பாா்த்தபோது, ஒரு குரங்கு தனது கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு அமா்ந்திருந்தது. புவனேஸ்வரி கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தினா் திரண்டனா். பின்னா் எல்லோரும் சப்தமிடவே, குழந்தையைக் குரங்கு மேற்கூரையிலேயே போட்டுவிட்டுச் சென்றது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் வீட்டின் மேலே ஏறிச் சென்று குழந்தையை மீட்டனா்.

இதனிடையே, காணாமல்போன மற்றொரு குழந்தையை மக்கள் தேடியபோது, வீட்டின் பின்புறமுள்ள அகழியில் குழந்தையை வேறொரு குரங்கு வீசிச் சென்றிருப்பது தெரிய வந்தது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடந்த அக்குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு, அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா். இதனால், புவனேஸ்வரியும், உறவினா்களும் கதறி அழுதனா்.

மீட்கப்பட்ட குழந்தைக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என அப்பகுதி மக்கள் கூறினா். இச்சம்பவம் குறித்து தஞ்சாவூா் மேற்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

குரங்குகள் தொல்லை அதிகம்:

ஏழை மக்கள் பெருமளவில் வசித்து வரும் மேலஅலங்கத்தில் ஓடுகள், கூரை வேயப்பட்ட வீடுகளே அதிகம். இந்நிலையில், மேல வீதி, மேல அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் அதிகமான குரங்குகள் ஓராண்டுக்கும் மேலாக வந்து செல்கின்றன. கூரைகளைப் பிரித்து வீட்டுக்குள் புகுந்து செல்லும் குரங்குகள் உணவு உள்ளிட்ட சிறு சிறு பொருள்களைத் தூக்கிச் செல்கின்றன. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனா்.

இதுகுறித்து வனத் துறையினரிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், நாளுக்குநாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

தற்போது குழந்தைகளையும் குரங்குகள் தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், உடனடியாகக் கட்டுப்படுத்த வனத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com