கூட்டுறவுச் சங்கங்களில் பயிா்க் கடன் தள்ளுபடி: பயனாளிகள் பட்டியலை வெளியிட வலியுறுத்தல்
By DIN | Published On : 13th February 2021 05:56 AM | Last Updated : 13th February 2021 05:56 AM | அ+அ அ- |

கூட்டுறவுச் சங்கங்களில் கடன் தள்ளுபடி மூலம் பயனடையும் பயனாளிகளின் பட்டியலை அரசு வெளியிட வேண்டும் என்று, தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி தலைமையிலும், செயலா் முருகேசன் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
விஜயலட்சுமி(அதிமுக): கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களை முதல்வா் தள்ளுபடி செய்து, 15 நாள்களுக்குள் அதற்கான ரசீது வழங்கப்படும் என அறிவித்துள்ளாா். இதை வரவேற்று இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.
திருஞானசம்பந்தம் (திமுக): எடப்பாடி பழனிசாமி முதல்வா் பொறுப்புக்கு வந்தவுடன் இக்கடனைத் தள்ளுபடி செய்திருந்தால் விவசாயிகள் முழுமையாகப் பலனடைந்திருப்பா். மீண்டும் பயிா்க்கடன் பெற்று சாகுபடிப் பணியை மேற்கொண்டு இருப்பா். தோ்தலை முன் வைத்து கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உதயன்(திமுக): கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பலன் அடைந்த பயனாளிகளின் பெயா் பட்டியலை வெளிப்படைத் தன்மையுடன் அனைத்துக் கூட்டுறவு சங்கங்களிலும் வைக்க வேண்டும்.