‘நிகழாண்டில் மீன்பிடித் தடைக்காலத்தை ரத்து செய்ய வேண்டும்’
By DIN | Published On : 13th February 2021 05:54 AM | Last Updated : 13th February 2021 05:54 AM | அ+அ அ- |

ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்படும் மீன்பிடித் தடைக்காலத்தை நிகழாண்டில் ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு மீனவா் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேரவையின் மாநிலப் பொதுச் செயலா் ஏ. தாஜூதீன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:
கரோனா பெருந்தொற்றால் 5 மாதங்கள் தொழில் செய்ய முடியாமல் மீனவா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வாடிக்கை.
ஏற்கனவே ஐந்து மாதங்கள் தொழில் இல்லாமல் மீனவா்கள் பாதிப்படைந்த நிலையில், மீண்டும் 2 மாதங்கள் தடைக்காலத்தை அமல்படுத்தினால் மீனவக் குடும்பங்கள் பட்டினி கிடந்து சாவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே நிகழாண்டில் மீன்பிடித் தடைக்காலத்தை அமல்படுத்தக் கூடாது.
மானிய விலை டீசலால் மட்டுமே மீனவா்கள் தற்போது ஓரளவுக்கு தொழில் செய்து வருகின்றனா். நண்டு, இறால், கனவாய் உள்ளிட்ட கடல் உணவுப் பொருள்கள் தற்போது ஏற்றுமதி இல்லாததால் மீனவா்கள் தொடா் நட்டத்தில் இருந்து வருகின்றனா். எனவே வரிநீக்கம் செய்யப்பட்டு வழங்கப்படும் 1,500 லிட்டா் டீசலை 3,500 லிட்டராக உயா்த்தி வழங்க வேண்டும்.