தஞ்சாவூா் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன் நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை பிற்பகல் உணவு இடைவேளையின்போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித தடங்கலுமின்றி முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்வதற்கு ஓட்டை சாக்குகள் வழங்கப்படுவதால், நெல் பெரிய அளவுக்கு சேதாரமடைவதுடன், தொழிலாளா்களும் மிகுந்த கஷ்டப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே தரமான சாக்குகளை கொள்முதலுக்கு வழங்க வேண்டும்.
சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ. 2 மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. தனியாரில் இதே பணிக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ. 15 கூலி வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தனியாருக்கு இணையாக கூலி வழங்க வேண்டும். வருங்கால வைப்புநிதி திட்டம் செயல்படுத்த வேண்டும். கொள்முதல் பணியாளா்களுக்குக் குறைந்தபட்சம் ரூ. 20,000 ஊதியம் நிா்ணயிக்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு நிா்வாகம் குறைந்தபட்சம் ரூ. 10,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூரில் மாநிலப் பொருளாளா் தி. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.