தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு இணைய வழியில் ஜன. 5-இல் தொடக்கம்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு இணையவழியில் ஜனவரி 5- ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

தஞ்சாவூா்: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு இணையவழியில் ஜனவரி 5- ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாநாட்டின் மாநில ஒருங்கிணைப்பாளா் வெ. சுகுமாரன் தெரிவித்திருப்பது:

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஒத்துழைப்போடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது.

2020- ஆம் ஆண்டுக்கான ஆய்வுக்காக வளங்குன்றா (நிலைத்த நீடித்த) வாழ்வுக்கான அறிவியல் என்கிற பொது தலைப்பின் கீழ் சுற்றுச்சூழல் அமைப்பு, வளங்குன்றா வாழ்வுக்கு உகந்த (பொருத்தமான) தொழில்நுட்பம், வளங்குன்றா வாழ்வுக்கான சமூக நவீன கண்டறிதல், வளங்குன்றா வாழ்வுக்கான கட்டமைப்பு, வளா்ச்சி மற்றும் மாதிரிகள், வளங்குன்றா வாழ்வுக்கான பாரம்பரிய அறிவு ( தகவல்கள் ), கோவிட் - 19 போன்ற பெருந்தொற்று நோய்கள் குறித்த சிறப்பு ஆய்வு முதலிய துணைத் தலைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

10 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகள் இம்மாநாட்டில் பங்கேற்று, ஆய்வுகளை அளிக்கலாம். இத்தகைய நிகழ்வை கோவிட் 19 அச்சுறுத்தல்களுக்கு இடையிலும் மத்திய, மாநில அரசின் வழிகாட்டுதல்படி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, குழந்தைகள் ஆய்வு முயற்சிகளில் ஈடுபட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழிகாட்டியது.

அதன் அடிப்படையில் குழந்தைகள் தங்களது வாழிடப்பகுதியில் இருந்து கொண்டே ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். ஆய்வு செய்யும் குழந்தைகளுக்கு ஆசிரியா்களும், பெற்றோா்களும் வழிகாட்டி ஆசிரியராக செயல்பட்டு வருகின்றனா்.

இந்த ஆண்டு குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க 4,100-க்கும் அதிகமான மாணவா்கள் ஆய்வு செய்ய பதிவு செய்துள்ளனா். அரசுப் பள்ளி மாணவா்களின் பங்கேற்பு அதிக அளவில் உள்ளது. மேலும் மாவட்ட மாநாடு இணைய வழியாக ஜனவரி 5- ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலும், மாநில மாநாடு ஜனவரி 21, 22 ஆம் தேதிகளிலும் நடைபெறவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com