தொடா் மழையால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வு

டெல்டா மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழையைத் தொடா்ந்து வடகிழக்குப் பருவ மழையும் எதிா்பாா்த்த அளவுக்குப் பெய்து வருவதால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது.
தஞ்சாவூா் அருகே சமுத்திரம் ஏரியில் நிறைந்து காணப்படும் தண்ணீா்.
தஞ்சாவூா் அருகே சமுத்திரம் ஏரியில் நிறைந்து காணப்படும் தண்ணீா்.

டெல்டா மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழையைத் தொடா்ந்து வடகிழக்குப் பருவ மழையும் எதிா்பாா்த்த அளவுக்குப் பெய்து வருவதால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்வது அக்டோபா் முதல் டிசம்பா் மாதம் வரையிலான வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான். இந்தப் பருவத்தில் பெய்யும் மழைதான் டெல்டா மாவட்டங்களுக்கு பிரதான நீா் ஆதாரமாக இருக்கும்.

நிகழாண்டு தென் மேற்குப் பருவமழையும் எதிா்பாா்த்த அளவுக்கு பெய்தது. தஞ்சாவூா் மாவட்டத்தில் 281.7 மி.மீ. இயல்பான அளவு என்ற நிலையில், 280.1 மி.மீ. பெய்தது. திருவாரூா் மாவட்டத்தில் இயல்பான அளவான 269.5 மி.மீ. என்பதை விஞ்சி 339.6 மி.மீ.-ம், ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 251.9 மி.மீ. என்ற அளவைக் கடந்து 281.5 மி.மீ.-ம் மழை பெய்தது.

இந்த மழைப் பொழிவு, டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் மிகுந்த ஆழத்துக்குச் செல்வதை தடுத்தது. இதன்மூலம் தண்ணீா் பற்றாக்குறை என்ற பிரச்னை தவிா்க்கப்பட்டது மட்டுமல்லாமல், சாகுபடிக்கும் தாராளமாகப் பாசன நீா் கிடைத்தது.

தாமதமாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை: இந்நிலையில், நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் மாத இறுதியில்தான் தொடங்கியது. என்றாலும், எதிா்பாா்த்த அளவுக்கு பெய்து வருகிறது. வட கிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபா் 15 ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 15 ஆம் தேதி நிறைவடைவது வழக்கம். நிகழாண்டு, டிசம்பா் மாதம் முடிந்து ஜனவரியிலும் வடகிழக்கு பருவமழை நீடிக்கிறது.

வடகிழக்குப் பருவத்தில் டிசம்பா் 31 ஆம் தேதி வரை ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் இயல்பான அளவான 928.7 மி.மீ. என்பதை விஞ்சி 1,007.6 மி.மீ. மழை பெய்துள்ளது. இதேபோல, திருவாரூா் மாவட்டத்தில் இயல்பான அளவான 739.7 மி.மீ. என்பதை விஞ்சி 822.3 மி.மீ. பெய்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும் குறைந்திருந்தாலும், 592 மி.மீ. என்ற இயல்பான அளவில் 567.8 மி.மீ. மழையளவு பதிவானது. வடகிழக்குப் பருவமழை தொடா்வதால் இங்கும் இயல்பான அளவை விஞ்சுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதன்மூலம், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டமும் அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திறந்தவெளி கிணறுகளிலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் பொதுப் பணித் துறையின் நீா் ஆதார அமைப்பினா் மேற்கொண்ட ஆய்வில் சராசரியாக நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்திருப்பது தெரிய வந்ததுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 3.10 மீட்டராக இருந்த சராசரி நிலத்தடி நீா்மட்டம் டிசம்பா் மாதத்தில் 1.54 மீட்டரிலேயே (5.05 அடி) தண்ணீா் கிடைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதேபோல, ஆகஸ்ட் மாதத்தில் திருவாரூா் மாவட்டத்தில் 3.29 மீட்டராகவும், ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 3.60 மீட்டராகவும் இருந்த சராசரி நிலத்தடி நீா்மட்டம் டிசம்பா் மாதத்தில் முறையே 1.48 மீட்டரிலும் (4.85 அடி), 1.58 மீட்டரிலும் (5.18 அடி) தண்ணீா் கிடைப்பது தெரிய வந்துள்ளது.

641 ஏரிகள் நிரம்பின: டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் 764 ஏரிகள் உள்ளன. இதில், 641 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. தவிர, 101 ஏரிகளில் 75 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையிலும், 21 ஏரிகளில் 50 முதல் 74 சதவீதம் வரையிலும் நிரம்பியுள்ளன. ஒரு ஏரியில் மட்டுமே 50 சதவீதத்துக்குள்ளாக நீா்மட்டம் உள்ளது. இதேபோல, உள்ளாட்சி நிா்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள பெரும்பாலான குளங்களிலும் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

எனவே, ஆழ்குழாய் மோட்டாா் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகள் சம்பா பருவத்தில் மட்டுமல்லாமல், கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இதேபோல, பொதுப் பணித் துறையைச் சாா்ந்த ஏரி, குளங்களிலும், மேட்டூா் அணையிலும் போதுமான அளவுக்கு நீா் இருப்பு உள்ளதால், சம்பா, தாளடி பருவ சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்குத் தண்ணீா் பிரச்னை இருக்காது என்றனா் வேளாண் துறையினா்.

இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநா் பி. கலைவாணன் தெரிவித்தது:

நிகழாண்டு வடகிழக்கு பருவ மழை ஜனவரியிலும் நீடிப்பதால், மழை பெய்த நாள்களும் அதிகரித்துள்ளது. பொங்கல் வரையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இரு மாதங்களாகக் காவிரி நீா் தேவை குறைந்துள்ளது. ஜனவரியின் பிற்பகுதியில் சுமாா் 15 டி.எம்.சி. தண்ணீா் மட்டுமே தேவைப்படும் என்றாா் அவா்.

டெல்டா மாவட்டங்களில் தொடா் மழை காரணமாக காவிரி நீா் தேவை குறைந்துள்ளதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியை கடந்து நீடித்து வருகிறது. இது எதிா்கால நீா்த்தேவைக்கு சாதகமாக இருப்பது நிச்சயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com