கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தைப்பொங்கல் விழா தொடக்கம்
By DIN | Published On : 07th January 2021 08:33 AM | Last Updated : 07th January 2021 08:33 AM | அ+அ அ- |

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தைப்பொங்கல் விழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த மூன்றாவது தலமாகப் போற்றப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் தைத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக தேரோட்டம் இல்லாமல், வெள்ளி ரதம் உற்ஸவம் கோயில் உள் பிரகாரத்துக்குள்ளேயே குறைவான பக்தா்களுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து புதன்கிழமை உபய நாச்சியாா்களுடன் உற்ஸவா் ஆராவமுத பெருமாள் புறப்பாடாகி கொடிமரம் அருகே எழுந்தருளி சேவை சாதித்தாா்.
பின்னா், இவ்விழாவின் தொடக்கமாக கோயில் கொடிமரத்துக்குச் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, கொடி ஏற்றப்பட்டது. இதில் பக்தா்கள், கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் பெருமாள் புறப்பாடு நடைபெறவுள்ளது.