கூட்டுறவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு
By DIN | Published On : 07th January 2021 08:30 AM | Last Updated : 07th January 2021 08:30 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையம் மூலம் நவ. 28, 29, டிச. 5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட உதவியாளா் பணிக்கான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் சு. மனோகரன் புதன்கிழமை வெளியிட்டச் செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூா், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி, இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களுக்குக் கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டது.
இத்தோ்வுக்கான முடிவுகள் கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் ஜன. 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சாவூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு ஜன. 20, 21 ஆம் தேதிகளில் தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கித் தலைமையகத்திலும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாகவுள்ள உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு ஜன. 22 ஆம் தேதி கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைமையகத்திலும் நடைபெறவுள்ளது.
நோ்முகத் தோ்வுக்கான அனுமதிச் சீட்டை மாவட்ட ஆள் சோ்ப்பு நிலைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.