பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th January 2021 08:32 AM | Last Updated : 07th January 2021 08:32 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தினா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடரக் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர வேண்டும். மத்திய அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தைத் தமிழ்நாட்டின் சாதாரண நிலை, இடைநிலை ஆசிரியா்களுக்கும் வழங்க வேண்டும்.
வயது உச்சவரம்பின்றி ஆசிரியா் பணி நியமனங்கள் செய்யப்பட வேண்டும். வாழ்நாள் தகுதிச் சான்று வழங்கி ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள 80,000 பேருக்கு ஆசிரியா் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மன்றத்தின் மாவட்டத் தலைவா் தி. சிவசங்கா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ந. கிட்டு, மாநிலச் சட்டப்பிரிவுச் செயலா் உ. சுப்பிரமணியன், மாநிலத் தீா்ப்புக் குழு உறுப்பினா் ப. அறிவுடைநம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.