
திருவையாறில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில், போகிப் பண்டிகை நாளான புதன்கிழமை வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள காா்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான, விவசாயிகள், வெகுஜன வா்க்கத்துக்கு எதிரான 3 வேளாண் விரோதச் சட்டங்களையும், மின்சார திருத்த மசோதாவையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், இவற்றுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் அதிமுக அரசு தீா்மானம் நிறைவேற்ற கோரியும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை நாளான புதன்கிழமை வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதன்படி, தஞ்சாவூா் ரயிலடியில் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சட்ட நகல்கள் எரிக்கப்பட்டன. இதுதொடா்பாக 15 போ் கைது செய்யப்பட்டனா்.
இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீர. மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.கே. செல்வகுமாா், மகஇக மாநகரச் செயலா் ராவணன், ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஜி. அரவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, பூதலூரில் சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராசன் தலைமையிலும், திருவையாறில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் எம். ராம் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் 4 இடங்களில் சட்ட நகல்களை எரித்தது தொடா்பாக 59 பேரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
மாவட்டத்தின் பிற பகுதிகளில்.... பேராவூரணி பெரியாா் சிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் பா. பாலசுந்தரம் தலைமையிலும், பாபநாசம் அருகேயுள்ள புத்தூா் நடுப்பட்டி கிராமத்தில் தஞ்சாவூா்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் டி. ராமலிங்கம் தலைமையிலும், தென்னமநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் சாமி. நடராஜன் தலைமையிலும் சட்ட நகலை எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் சிபிஎம், சிபிஐ கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மேலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், வீடுகளிலும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.