மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்து வரும் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிா்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்து வரும் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிா்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் 1,37,147 ஹெக்டேரில் சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், டிசம்பா் மாதத்தில் புரெவி புயல் மற்றும் அதைத் தொடா்ந்து பெய்த தொடா் மழையால் 8,550 ஹெக்டேரில் சம்பா, தாளடி பயிா்கள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், பருவம் தவறி பெய்து வரும் தொடா் மழையால் மாவட்டத்தில் பெரும்பாலான சம்பா, தாளடி பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கதிா் முற்றி அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெற் பயிா்கள் சாய்ந்தும், கதிா் விடும் தருவாயில் உள்ள பயிா்களில் மழை நீா் விழுந்ததால் பதராகும் நிலையிலும் உள்ளன. ஒவ்வொரு கதிரிலும் 50 சதவீதத்துக்கும் அதிகமாகப் பாதிப்பு இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்தது. எனவே, ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் பாதிப்பு இருக்கலாம் என வேளாண் துறையினா் கருதுகின்றனா்.

இதுதொடா்பாக வேளாண் துறை, வருவாய்த் துறையினா் கணக்கெடுப்பு செய்து வருகின்றனா். இதன் முடிவில் பாதிப்பு விவரம் முழுமையாகத் தெரிய வரும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

மாநிலங்களவை உறுப்பினா், ஆட்சியா் ஆய்வு: இதனிடையே, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் புக்கரம்பை, சொக்கநாதபுரம், பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம், ஒரத்தநாடு வட்டத்தில் ஒரத்தநாடு, பாளமுத்தூா், புதூா், பாப்பாநாடு நெம்மேலி வடக்கு, அம்மாபேட்டை அருகே திருபுவனம், கோவில்பத்து உள்ளிட்ட இடங்களில் பாதிக்கப்பட்ட பயிா்களை மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம், ஆட்சியா் ம. கோவிந்த ராவ் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட பயிா்களை விவசாயிகள் எடுத்துக் காண்பித்தனா். இதை பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். மேலும், வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களிடம் எந்த ஒரு பாதிப்பையும் விடுபடாமல், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது சட்டப்பேரவை உறுப்பினா்கள் சி.வி. சேகா் (பட்டுக்கோட்டை), மா. கோவிந்தராசு (பேராவூரணி), அதிமுக ஒன்றியச் செயலா்கள் பேராவூரணி வடக்கு உ. துரைமாணிக்கம், தெற்கு கோவி. இளங்கோ உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

திருவிடைமருதூரில் 107 மி.மீ. மழை:

மாவட்டத்தில் புதன்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

திருவிடைமருதூா் 107, மஞ்சளாறு 93, கும்பகோணம் 84.6, அய்யம்பேட்டை 82, ஈச்சன்விடுதி 80.2, பேராவூரணி 78.2, அணைக்கரை, பூதலூா் தலா 60.6, தஞ்சாவூா் 59, குருங்குளம் 58, பட்டுக்கோட்டை 51, திருக்காட்டுப்பள்ளி 46, வல்லம் 44, திருவையாறு 41, நெய்வாசல் தென்பாதி 37.8, கல்லணை 36.2, பாபநாசம் 35, மதுக்கூா் 32.4, அதிராம்பட்டினம் 30.9, ஒரத்தநாடு 17.9, வெட்டிக்காடு 14.6.

மாவட்டத்தில் சராசரியாக 54.74 மி.மீ. மழையளவு பதிவாகியது. மாவட்டத்தில் கடந்த 13 நாள்களில் சராசரியாக 227.21 மி.மீ. மழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com