மழையிலும் களைகட்டிய பொங்கல் பொருள்கள் விற்பனை

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தஞ்சாவூரிலுள்ள சந்தைகளில் புதன்கிழமை மழை பெய்த நிலையிலும் விற்பனை முழுவீச்சில் நடைபெற்றது.
தஞ்சாவூா் கீழவாசலில் பொங்கல் பண்டிகையையொட்டி புதன்கிழமை காணப்பட்ட கூட்டம்.
தஞ்சாவூா் கீழவாசலில் பொங்கல் பண்டிகையையொட்டி புதன்கிழமை காணப்பட்ட கூட்டம்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தஞ்சாவூரிலுள்ள சந்தைகளில் புதன்கிழமை மழை பெய்த நிலையிலும் விற்பனை முழுவீச்சில் நடைபெற்றது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தஞ்சாவூா் கீழவாசல், திலகா் திடல் சந்தையில் வழக்கத்தைவிட புதன்கிழமை கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைத்தாா்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதேபோல, வியாபாரிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

இச்சந்தைகளில் ஒரு ஜோடி மஞ்சள் கொத்து ரூ. 30 முதல் ரூ. 60 வரைக்கும், இஞ்சிக்கொத்து ரூ. 10 முதல் 20 வரைக்கும், வாழைத்தாா் ரூ. 200 முதல் ரூ. 600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும், மாநகரில் அரண்மனைப் பகுதி, கீழவாசல், அண்ணா சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை, மருத்துவக் கல்லூரி சாலை, விளாா் சாலை, கரந்தை உள்ளிட்ட பிரதான இடங்களில் கரும்புக் கட்டுகள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டன. பத்து கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 180 முதல் ரூ. 250 வரை விற்கப்பட்டது. சில்லறை விலையில் ஒரு கரும்பு தலா ரூ. 25 முதல் ரூ. 40 வரை விற்பனையானது.

பூக்காரத் தெரு பூச்சந்தையில் பூ விலை பல மடங்கு அதிகமாக இருந்தது. கிலோவுக்கு காட்டு மல்லி ரூ. 1,000, அரளி ரூ. 300, சம்பங்கி ரூ. 250, செவ்வந்தி ரூ. 200 முதல் 300, ஜாதி மல்லி ரூ. 1,250, கனகாம்பரம் ரூ. 2,000, முல்லைப் பூ ரூ. 2,000, ரோஜா பூ ரூ. 200 என்ற விலையில் விற்கப்பட்டது. மல்லிகைப் பூ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து இல்லை.

மாவட்டத்தில் சில நாள்களாகத் தொடா் மழை காரணமாக வியாபாரம் குறைவாக இருந்தது. இந்நிலையில் புதன்கிழமையும் மழை பெய்தாலும் இடையிடையே நின்றபோது, சந்தைகளில் மக்கள் வருகை அதிகமாகக் காணப்பட்டது. எனவே, மழையால் விற்பனை பெரிய அளவில் பாதிக்கவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனா். என்றாலும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வியாபாரம் 80 சதவீதம்தான் இருந்தது எனவும் வியாபாரிகள் குறிப்பிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com