தஞ்சாவூா் மாவட்டத்தில் 13,964 பேருக்கு கரோனா தடுப்பூசி

தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக, 13,964 பேருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்குப் பட்டியலிடப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வா் (பொறுப்பு) எஸ். மருதுதுரைக்கு போடப்பட்ட தடுப்பூசி. உடன், மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வா் (பொறுப்பு) எஸ். மருதுதுரைக்கு போடப்பட்ட தடுப்பூசி. உடன், மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக, 13,964 பேருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்குப் பட்டியலிடப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கும்பகோணம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைகள், பட்டீசுவரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இப்பணியைப் பாா்வையிட்ட பின்னா், மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாவட்டத்தில் முதல் கட்டமாக மருத்துவா்கள், செவிலியா்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தமாக 13,964 பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. இவா்களுக்குப் படிப்படியாக கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும்.

இம்மாவட்டத்துக்கு 15,500 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 2,100 கோவேக்ஸின் தடுப்பூசி என மொத்தம் 17,600 தடுப்பூசிகள் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அவ்வப்போது எந்தந்தப் பகுதிகளுக்குத் தேவைப்படுகிறதோ, அங்கு சிறப்பு முகாம் அமைத்து கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும். அனைத்து முகாம்களுக்கும் போதுமான அளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 17,000 முன் களப் பணியாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா்.

ஒரே நேரத்தில் எல்லோருக்கும் தடுப்பூசி போட முடியாது. அதனால்தான் ஒவ்வொரு மையத்திலும் நாள்தோறும் 100 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. தேதி வாரியாக முகாம் நடத்தப்பட்டு, அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.

இந்தத் தடுப்பூசியைச் சட்ட விரோதமாக யாராவது பயன்படுத்துகிறாா்களா என கண்காணிக்கப்படும். அதுபோல யாராவது செயல்பட்டால், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

தொடக்க நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை இணை இயக்குநா் ராமு, துணை இயக்குநா் ஐ. ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரைமணி நேரம் கண்காணிப்பு: தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் கோவேக்ஸின் தடுப்பூசியை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) எஸ். மருதுதுரை முதல் நபராகவும், நிலைய மருத்துவ அலுவலா் (பொறுப்பு) முகமது இத்ரீஷ் இரண்டாவது நபராகவும், கோவிஷீல்டு தடுப்பூசியை முதலாவதாக மருத்துவா் எஸ். வெண்ணிலா, இரண்டாவதாக மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவா் ஏ. மத்தியாஸ் ஆா்தா் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து மற்றவா்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போடப்பட்ட முதல் அரை மணிநேரம் முகாமிலேயே உட்கார வைக்கப்பட்டு, அவா்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிா எனக் கண்காணிக்கப்படுகின்றனா். பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு அனுப்பி வைக்கப்படுகின்றனா். தொடக்க நாளில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

முதல் தவணை தடுப்பூசி போடப்பட்ட 28 ஆவது நாளில் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்படவுள்ளது. முதல் தவணையில் 28 நாள்களும், இரண்டாவது தவணையில் 14 நாள்களும் ஏதேனும் பக்க விளைவுகள் இருக்கிா என கண்காணிப்பு செய்யப்படுகிறது எனவும் மருத்துவா்கள் கூறினா்.

மது அருந்தக் கூடாது: பொதுவாக எந்த ஒரு மருந்து எடுத்துக் கொண்டாலும் மது அருந்தினால், பாதிப்பு ஏற்படும்போது, எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிவது சிரமமாக இருக்கும். அதுபோல இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்பவா்களும் 42 நாள்களுக்கு மது அருந்தாமல் இருந்தால்தான், அதன் பலன் தெரியும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

முதல் நாளில் 129 பேருக்கு கரோனா தடுப்பூசி

தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் நாளான சனிக்கிழமை 129 போ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவேக்ஸின் 40 பேரும், கோவிஷீல்ட் 40 பேரும் என மொத்தம் 80 போ் போட்டுக் கொண்டனா்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 30 பேரும், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 6 பேரும், பட்டீசுவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 13 பேரும் என மாவட்டத்தில் மொத்தம் 129 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஒவ்வொரு மையத்திலும் நாள்தோறும் 100 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 80 போ் போட்டுள்ளனா். இத்தடுப்பூசி குறித்து அச்சம் நிலவுவதே மற்ற இடங்களில் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் முகாமை சாா் ஆட்சியா் எஸ்.பாலசந்தா் தொடக்கி வைத்தாா். தலைமை மருத்துவா் அ. அன்பழகனுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது. அவரைத் தொடா்ந்து மருத்துவத் தம்பதி கி. நியூட்டன், மீனா நியூட்டன் மற்றும் முன்களப் பணியாளா்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனா். மாலை 5 மணி வரை 24 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தமாக 30 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com