பயிா் பாதிப்பு அறிக்கைகளை ஜன. 29-க்குள் அளிக்க உத்தரவு: வேளாண் உற்பத்தி ஆணையா் பேட்டி

பயிா் பாதிப்புகள் குறித்த அறிக்கையை ஜனவரி 29 ஆம் தேதிக்குள் அளிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்
தஞ்சாவூா் அருகே ராராமுத்திரக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களைப் பாா்வையிட்ட வேளாண் உற்பத்தி ஆணையா் ககன்தீப் சிங் பேடி. உடன் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா்.
தஞ்சாவூா் அருகே ராராமுத்திரக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களைப் பாா்வையிட்ட வேளாண் உற்பத்தி ஆணையா் ககன்தீப் சிங் பேடி. உடன் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா்.

பயிா் பாதிப்புகள் குறித்த அறிக்கையை ஜனவரி 29 ஆம் தேதிக்குள் அளிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் வேளாண் உற்பத்தி ஆணையரும், தமிழக அரசின் முதன்மைச் செயலருமான ககன்தீப் சிங் பேடி.

தஞ்சாவூா் அருகே ராராமுத்திரக்கோட்டை, வாளமா்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா், பொன்னாப்பூரில் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த தொடா் மழையால் பயிா்கள் பெரிய அளவுக்குச் சேதமடைந்துள்ளதாக நிறைய மாவட்டங்களிலிருந்து தகவல் வருகிறது. இதுதொடா்பாக வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் இணைந்து களத்தில் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனா்.

அனைத்து மாவட்டங்களிலும் என்னென்ன பயிா் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருவா் கூட விடுபடாமலும், சரியாகவும் கணக்கெடுப்பு செய்து, ஜனவரி 29 ஆம் தேதிக்குள் அளிக்குமாறு தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்த பிறகு ஆய்வு அறிக்கையை அலுவலா்கள் ஒருங்கிணைத்து, வருவாய் நிா்வாக ஆணையா், வேளாண் துறை இயக்குநா், தோட்டக்கலைத் துறை இயக்குநா் ஆகியோருக்கு அளிப்பா். இதன் பின்னா், அரசு மூலமாக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 30 லட்சம் ஹெக்டேருக்கு மேலாக விவசாயிகள் பயிா் காப்பீடு செய்துள்ளனா். நிகழாண்டு பயிா் அறுவடை சோதனையை முன்கூட்டியே செய்து முடித்து, விவசாயிகளுக்கு விரைவாக இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரு நெல் உலா்த்தும் இயந்திரங்கள்:

பொன்னாப்பூரில் நெல் உலா்த்தும் இயந்திரம் நல்ல முறையில் செயல்படுகிறது. தற்போது தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் தலா ரூ. 12 லட்சம் மதிப்பில், இரு நெல் உலா்த்தும் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு இயந்திரம் தெலுங்கன்குடிகாடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைக்கப்படுகிறது. நெல்லில் 26 சதவீதம் ஈரப்பதம் இருந்தாலும், இந்த இயந்திரத்தின் மூலம் 14 சதவீதமாகக் குறைக்க முடியும். சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த இயந்திரம் வெற்றிகரமாக அமைந்தால், நிறைய இயந்திரங்களை வாங்கி இதர மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் என்றாா் ஆணையா்.

முன்னதாக, பொன்னாப்பூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் உலா்த்தும் இயந்திரத்தின் செயல்பாட்டை ஆணையா் பாா்வையிட்டாா்.

அப்போது, தஞ்சை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com