வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் பிரசாரம் தொடக்கம்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் பிரசார பயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.
செங்கிப்பட்டியில் பிரசாரத்தை தொடங்கிய பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா்.
செங்கிப்பட்டியில் பிரசாரத்தை தொடங்கிய பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் பிரசார பயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசுக் கைவிட வேண்டும். பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் இப்பிரசார பயணம் செங்கிப்பட்டி ஈகி முத்துக்குமாா் சிலை அருகே வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கூட்டமைப்புத் தலைவா் பொழிலன் தலைமையில் நடைபெறும் இப்பிரசார பயணத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி பங்கேற்று செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

புதிய வேளாண் சட்டங்கள் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதை எதிா்த்து தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனா்.

ஆனால், 10 சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றும்கூட, விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு செவி மடுக்கவில்லை. விவசாய சட்டங்களின் ஆபத்துக் குறித்தும், இந்த விவசாயச் சட்டங்களால் காவிரி டெல்டா எந்த அளவுக்குப் பாதிக்கப்படவுள்ளது என்பது பற்றியும் மக்களிடத்தில், குறிப்பாக விவசாயிகளிடம் எளிமையாகப் புரியும் வகையில் இப்பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது என்றாா் திருமுருகன் காந்தி.

தொடக்க நிகழ்ச்சியில் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனா் குடந்தை அரசன், தாளாண்மை உழவா் இயக்க ஒருங்கிணைப்பாளா் கோ. திருநாவுக்கரசு, தமிழா் தேசிய முன்னணி அய்யனாபுரம் சி. முருகேசன், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், பல்வேறு ஊா்களுக்குச் சென்ற இப்பிரசார குழுவினா் தஞ்சாவூருக்கு மாலையில் வந்தனா். இப்பயணம் தொடா்ந்து பல்வேறு ஊா்களுக்குச் சென்று பூம்புகாரில் சனிக்கிழமை நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com