பெருமழை: விதைத் தரத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

அசாதாரணமாகப் பெருமழை பெய்துள்ளதால், விதைத் தரத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகளை தஞ்சாவூா் விதைப் பரிசோதனை அலுவலா் து. சிவவீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

அசாதாரணமாகப் பெருமழை பெய்துள்ளதால், விதைத் தரத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகளை தஞ்சாவூா் விதைப் பரிசோதனை அலுவலா் து. சிவவீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா மற்றும் தாளடி பருவ நெல் வயல்களில் அறுவடை தொடங்கிவிட்டது. நிகழாண்டு அசாதாரணமாகப் பெய்த பெருமழையால் பெரும்பாலான இடங்களில் முதிா்ச்சியடையும் நேரத்தில் நெற்கதிா்கள் முற்றிலும் சாய்ந்து, மழை நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு நெற்பயிா்கள் முதிா்ச்சியடையும் நேரத்தில் மழை நீரால் பாதிக்கப்படும்போது, நெல்மணிகளில் ஈரப்பதம் மிகவும் அதிகமாகவும், பூஞ்சாண நோய் தாக்குதலால் நெல் மணிகளின் நிறம் மாறியும் தன்னுடைய பளபளப்புத் தன்மை இழந்தும் காணப்படும்.

இதனால், விதையின் முளைப்புத்திறன் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, சொந்தமாக விதைச் சேமிக்கவிருக்கும் விவசாயிகள், தங்கள் வயல்களை அறுவடை செய்த உடன் நெல் விதைகளை நன்கு சுத்தப்படுத்தி, உடனடியாக வெயிலில் காய வைப்பது மிகவும் அவசியம். விதைகளின் ஈரப்பதம் 13 சதவீதத்துக்குள் இருக்குமாறு காய வைக்க வேண்டும். நன்கு காய வைத்த விதைகளை, சுத்தம் செய்த மாட்டுத் தீவன கோணிப் பைகளிலோ அல்லது புதிய சாக்குகளிலோ சேமித்து வைக்க வேண்டும். காற்றோட்டமுள்ள அறையில் மூட்டைகளை நேரிடையாகத் தரையில் அடுக்காமல் பலகை போன்றவற்றில் ஆறு மூட்டைகளுக்கு மிகாமல் அடுக்கி வைப்பதன் மூலம் ஈரப்பதம் கூடாமல் பாதுகாக்கலாம்.

மேலும், நன்கு காய வைத்த தங்கள் விதைகளின் முளைப்புத்திறன் மற்றும் ஈரப்பத சதவீதத்தை அறிந்து கொள்ள தஞ்சாவூா் காட்டுத் தோட்டத்திலுள்ள விதைப் பரிசோதனை நியைத்தில் விவசாயிகள் தாங்கள் சேமிக்க இருக்கும் நெல் விதை மூட்டைகளில் இருந்து விதை மாதிரியை எடுத்து, தங்களின் முழு முகவரியுடன் பகுப்பாய்வு கட்டணமாக ஒரு மாதிரிக்கு ரூ. 30 மட்டும் செலுத்தி விதைப்பரிசோதனை தொழில்நுட்ப முறையில் விதைகளின் சரியான முளைப்புத்திறன் மற்றும் ஈரப்பதத்தை அறிந்து கொண்டு விதைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com