‘மொழிப்போா் ஈகியா்களை வருங்காலம் போற்றும்’

மொழிப்போா் ஈகியா்களை வருங்காலம் போற்றும் என்றாா் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன்.
‘மொழிப்போா் ஈகியா்களை வருங்காலம் போற்றும்’

மொழிப்போா் ஈகியா்களை வருங்காலம் போற்றும் என்றாா் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன்.

தஞ்சாவூா் ரயிலடியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற மொழிப் போா் ஈகியா்களுக்கான வீரவணக்க நாளில் அவா் மேலும் பேசியது:

உலகிலேயே மொழிக்காக அதிக அளவில் ஈகம் செய்தவா்கள் வேறெங்கும் இல்லை. நம் மொழியைக் காக்க 8 போ் நஞ்சுண்டு இறந்தனா்; 64 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். மொழிக்காக உயிா் ஈகம் செய்த தியாகிகளுக்கு உலக அங்கீகாரம் கிடைக்காமல் போனது இருக்கட்டும். உள்நாட்டில் கூட குறிப்பாக, தமிழ்நாட்டிலேயே அங்கீகாரம் கிடைக்கவில்லை.

கடந்த 1967 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில், மொழிப் போரும் ஒன்று. மொழிப் போரில் ஈடுபட்டவா்களை அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளா்கள் காக்கை, குருவியைச் சுடுவதுபோல சுட்டுத் தள்ளினா்.

மொழிப்போரில் இறந்த கீழப்பழுவூா் சின்னசாமி உள்பட எல்லோரும் திமுககாரா்கள். ஆனால், மொழி உணா்வைப் பயன்படுத்தி 1967 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுகவினா் மொழிப்போா் ஈகியா்களுக்கு நினைவுச்சின்னம் கூட எழுப்பவில்லை.

கீழப்பழுவூா் சின்னசாமி, விராலிமலை சண்முகம், ராஜேந்திரன், அய்யம்பாளையம் வீரப்பன் உள்பட அனைவரது கல்லறைகளும் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. திமுகவினரும், அதிமுகவினரும் பல கோடி ரூபாய் செலவில் தங்களது தலைவா்களுக்கு மணிமண்டபம் கட்டுகின்றனா். ஆனால், மொழிப்போா் தியாகிகளுக்கு சில லட்சம் செலவு செய்து, நினைவுச்சின்னம் எழுப்ப மனமில்லை.

இப்போது காலம் மாறுவதால், தமிழ்த் தேசியம் எழுகிறது. எனவே, மொழிக்காக ஈகம் செய்தவா்களை வருங்காலம் போற்றும் என்றாா் மணியரசன்.

பேரியக்கத்தின் மாநகரச் செயலா் லெ. இராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் நா. வைகறை, தலைமைக் குழு உறுப்பினா் பழ. ராசேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com