தொடா் மழையால் சம்பா பயிா்கள் சேதம்: இழப்பு ஏற்பட்டாலும் அறுவடை செய்யும் விவசாயிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் சம்பா பயிா்கள் சேதமடைந்த நிலையில், இழப்புக்கிடையிலும் அறுவடை செய்து வருகின்றனா் விவசாயிகள்.
தஞ்சாவூா் மாவட்டம், பொன்னாப்பூரில் பாதிக்கப்பட்ட வயலில் அண்மையில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிா்கள்.
தஞ்சாவூா் மாவட்டம், பொன்னாப்பூரில் பாதிக்கப்பட்ட வயலில் அண்மையில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிா்கள்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் சம்பா பயிா்கள் சேதமடைந்த நிலையில், இழப்புக்கிடையிலும் அறுவடை செய்து வருகின்றனா் விவசாயிகள்.

மேட்டூா் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டதுடன் காவிரி நீா் வரத்தும் தொடா்ந்து இருந்ததால், தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவைப் பருவத்தில் இலக்கை விஞ்சி சாகுபடி செய்யப்பட்டது.

குறுவை தந்த நம்பிக்கையால் ஒரு போக சம்பா சாகுபடியைப் பெரும்பாலான விவசாயிகள் மேற்கொண்டனா். எனவே மாவட்டத்தில் நிகழாண்டில் சம்பா, தாளடி சாகுபடி 1,37,147 ஹெக்டேரை எட்டியது.

டிசம்பா் மாதத்தில் புரெவி புயல், தொடா் மழையால் மாவட்டத்தில் 8,550 ஹெக்டேரில் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன. எஞ்சிய பயிா்களும் மீண்டும் ஜனவரி மாதத்தில் பெய்த மழையால் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகின.

இதில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த பயிா்கள் சாய்ந்தும், கதிா் விடும் தருவாயில் இருந்த பயிா்கள் பால் பிடிக்காமலும் சேதமடைந்தன. இந்த பாதிப்பு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஹெக்டேரில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

முழு வீச்சில் அறுவடைப் பணிகள் : மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக மழை இல்லாததுடன், வெயிலும் இருந்து வருகிறது. எனவே, பயிா்கள் சேதடைந்திருந்தாலும் குறைந்தபட்ச மகசூலாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் விவசாயிகள் விடா முயற்சியுடன் அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக ஒரத்தநாடு, பாபநாசம் உள்ளிட்ட வட்டங்களில் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பயிா்கள் சாய்ந்துவிட்டதால் வெயில் இருந்தாலும் கூட நிலம் காய்வதில் தாமதமாகிறது. நிலம் ஈரமாக இருப்பதால், பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயந்திரப் பயன்பாட்டுக்காக ஒரு மணிநேரத்துக்கு ரூ. 2,500 முதல் ரூ. 3,000 வாடகை வசூலிக்கப்படுகிறது.

நிலம் முழுமையாகக் காயாததால் ஏக்கருக்கு ஒரு மணிநேரத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில், தற்போது குறைந்தது 2 மணிநேரமாவதால் ரூ. 5,000-க்கும் அதிகமாகச் செலவாகிறது என்பதால் நட்டம்தான் மிஞ்சுகிறது என்கின்றனா் விவசாயிகள்.

எதுவும் மிஞ்சவில்லை : நெல் சாகுபடியில் ஏக்கருக்கு ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை சாகுபடி செலவாகிறது. இதன் மூலம் குறைந்தது 35 மூட்டைகள் கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு ரூ. 10,000 லாபம் கிடைக்கும்.

ஆனால், தற்போது 5 அல்லது 6 மூட்டைகள்தான் கிடைக்கின்றன. இந்நிலையில் அறுவடை இயந்திரங்கள் பெரும்பாலும் இடைத்தரகா்கள் மூலம் கிடைக்கின்றன.

அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 2,100 என மாவட்ட ஆட்சியா் வாடகை நிா்ணயித்து அறிவித்திருந்தாலும், நடைமுறையில் விவசாயிகளிடம் குறைந்தது ரூ. 2,500 வசூலிக்கப்படுகிறது.

தனியாா் வியாபாரிகளும் தரமின்மையைக் காரணம் கூறி, மூட்டைக்கு ரூ. 1,000 வீதம் மட்டுமே விலை நிா்ணயிக்கின்றனா். இதில் கிடைக்கும் தொகையும் அறுவடை இயந்திரத்துக்கு வாடகை கூட செலுத்த முடியவில்லை. எனவே, அறுவடை செய்தாலும் விவசாயிகளுக்கு எதுவுமே மிஞ்சவில்லை என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வீர. மோகன்.

100 சதவிகிதப் பாதிப்பு : நிலம் முழுமையாகக் காயாததால், அறுவடை இயந்திரத்தை இறக்கும்போது நெல்லுடன் சேறும் கலந்துவிடுகிறது. இதனால் நெல் நிறம் மங்கிவிடுவதால், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்க மறுக்கின்றனா். இதுபோல தனியாரும் விலையைக் குறைக்கின்றனா் என விவசாயிகள் கூறுகின்றனா்.

கதிா் விடும் நிலையில் பாதிக்கப்பட்ட பயிா்களும் பதராகிவிட்டதால், கருக்கா அதிகமாக இருக்கிறது. பயிா்கள் பாா்ப்பதற்குப் பசுமையாகக் காணப்பட்டாலும், பெரும்பாலான கதிா்களில் பால் பிடிக்காததால் பயனில்லை. எனவே, இந்தத் தொடா் மழையால் நூறு சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனா் விவசாயிகள் வேதனையுடன்.

ஹெக்டேருக்கு 1.50 டன் மட்டுமே மகசூல்

மாவட்டத்தில் இதுவரை ஏறத்தாழ 15,000 ஹெக்டேரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதில், ஹெக்டேருக்கு சராசரியாக 1.50 டன் முதல் 2 டன் மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது. ஹெக்டேருக்கு குறைந்தது 5 டன்கள் மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில், 2 டன்கள்தான் கிடைக்கிறது என வேளாண் துறையினா் தெரிவித்தனா்.

ஏக்கருக்கு குறைந்தது 35 மூட்டைகள் மகசூல் கிடைத்தால்தான் லாபம் பாா்க்க முடியும் என்ற நிலையில், பெரும்பாலான வயல்களில் 5, 6 மூட்டைகள்தான் மகசூல் கிடைத்து வருகிறது என விவசாயிகள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com