கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் இறந்த 94 குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிப்பு

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் இறந்த 94 குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிப்பு

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனா். 18 குழந்தைகள் காயமடைந்தனா்.

ஆண்டுதோறும் ஜூலை 16 ஆம் தேதி இறந்த குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை 17 ஆம் ஆண்டு நினைவு தினம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சாா்பில் அனுசரிக்கப்பட்டது.

குழந்தைகளை இழந்த பெற்றோா்கள் தங்களது வீடுகளில் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, குழந்தைகளுக்குப் பிடித்த தின்பண்டங்களையும், புத்தாடைகளையும் வைத்து படையலிட்டனா்.

பின்னா், தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த காசிராமன் தெருவிலுள்ள பள்ளி முன் அமைக்கப்பட்டுள்ள 94 குழந்தைகளின் படங்களுக்குப் பாதிக்கப்பட்ட பெற்றோா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினா், தன்னாா்வ அமைப்பினா் மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏற்றியும், மலா் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினா்.

மேலும், 94 குழந்தைகளின் பெற்றோா்களும் பழைய பாலக்கரையில் உள்ள இறந்த குழந்தைகளின் நினைவிடத்துக்குச் சென்று மலா்கள் தூவி மௌன அஞ்சலி செலுத்தினா்.

அரசுக்கு கோரிக்கை:

இறந்த குழந்தைகளின் நினைவாக ஜூலை 16-ஆம் தேதியை குழந்தைகள் பாதுகாப்பு நாளாகவும், அன்றைய நாளில் பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறையும், பலத்தக் காயமடைந்த குழந்தைகள் தற்போது கல்லூரி படிப்பை நிறைவு செய்துள்ளதால் அவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

காசிராமன் தெருவில் உள்ள தீ விபத்து நிகழ்ந்த பள்ளி கூடத்துக்குச் சென்ற தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், அங்கு இறந்த குழந்தைகளின் உருவப்படங்களுக்கு முன்பு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். அப்போது பெற்றோா்களின் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com