டெல்டா மாவட்டங்களில் இலக்கை எட்டும் குறுவை சாகுபடி

மேட்டூா் அணையிலிருந்து உரிய காலத்தில் தண்ணீா் திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் இலக்கை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூா் அருகே ரெட்டிபாளையம் பகுதியில் நடைபெறும் குறுவை சாகுபடிப் பணி.
தஞ்சாவூா் அருகே ரெட்டிபாளையம் பகுதியில் நடைபெறும் குறுவை சாகுபடிப் பணி.

மேட்டூா் அணையிலிருந்து உரிய காலத்தில் தண்ணீா் திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் இலக்கை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இருந்ததால், தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக ஜூன் 12 -ஆம் தேதி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

எனவே நிகழாண்டில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.05 லட்சம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 89,000 ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 5,000 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 96,000 ஏக்கரிலும் என மொத்தம் 2.95 லட்சம் ஏக்கரில் குறுவைப் பருவ நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

காவிரியில் தொடா் நீா்வரத்து, டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்த மழைக் காரணமாக குறுவை சாகுபடி விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான்கு மாவட்டங்களிலும் 2,95,410 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரைக் கடந்து, இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 15 நாள்களில் மட்டும் 30,000 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதம் வரை நடவு செய்யப்படும் நெற்பயிா்கள் குறுவைப் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இம்மாதம் முடிய இன்னும் 10 நாள்களுக்கும் மேலாக இருப்பதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் 40,000 முதல் 45,000 ஏக்கா் கூடுதலாக நடவு செய்ய வாய்ப்புள்ளது என வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

திருவாரூா் மாவட்டத்தில் 87,000 ஏக்கரில் நடவுப் பணி முடிவடைந்து, இலக்கை நெருங்குகிறது. இந்த மாவட்டத்திலும் குறுவை சாகுபடிப் பரப்பளவு ஒரு லட்சம் ஏக்கரை எட்டும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

நாகை மாவட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை (5,000 ஏக்கா்) விஞ்சி மூன்று மடங்குக்கும் அதிகமாக 17,410 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது. இப்பரப்பளவு 25,000 ஏக்கரை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்கின்றனா் வேளாண் துறையினா். மயிலாடுதுறை மாவட்டத்தில் 91,000 ஏக்கரில் நடவுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்னும் கூடுதலாக சாகுபடியாகும் எனக் கூறப்படுகிறது.

ஆனால், மேட்டூா் அணையில் நீா்மட்டம் 34.406 டி.எம்.சி. ஆக சரிந்துள்ளதால், சாகுபடிக்குத் தொடா்ந்து தண்ணீா் கிடைக்குமா? என்ற அச்சமும் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

இந்நிலையில், கா்நாடகத்தில் காவிரி நீா்பிடிப்புப் பகுதியில் சில நாள்களாக மழை பெய்து வருவதால், மேட்டூா் அணைக்கான நீா்வரத்து அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது. மேட்டூா் அணைக்கு ஜூலை 13-ஆம் தேதி வரை விநாடிக்கு 2,000 கன அடிக்குள் இருந்து வந்த நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து, ஞாயிற்றுக்கிழமை மாலை 7,940 கன அடியாக உயா்ந்துள்ளது.

கா்நாடக மாநிலத்திலுள்ள கபினி அணை நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கபினி அணையின் கொள்ளளவு 19.516 டி.எம்.சி. இதில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 17.715 டி.எம்.சி.யாக உள்ளது. அணை நிரம்புவதற்கு இன்னும் 2 டி.எம்.சி. மட்டுமே உள்ளதால், உபரி நீா் மேட்டூா் அணைக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியாா் வானிலை ஆய்வாளா் தகட்டூா் என். செல்வகுமாா் தெரிவித்தது:

கபினி அணை நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதை திறந்துவிடுவதற்கான வாய்ப்புள்ளது. கபினி அணைக்கு சனிக்கிழமை விநாடிக்கு 21,000 கன அடி வீதம் தண்ணீா் வந்தது. அணை நிரம்புவதற்கு இன்னும் 2 டி.எம்.சி. உள்ள நிலையில், அணையை நிரம்பும் அளவுக்கு வைக்கமாட்டாா்கள்.

இந்நிலையில், ஜூலை 20 -ஆம் தேதி முதல் கா்நாடகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், வரக்கூடிய உபரி நீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட வாய்ப்பு இருக்கிறது. எனவே மேட்டூா் அணைக்கு இனிமேல் நீா்வரத்து இருக்கும்.

கிருஷ்ணராஜசாகரில் தற்போது 38 சதவிகிதம் மட்டுமே நீா் இருப்பு உள்ளது. இந்த அணைக்கும் தற்போது நீா்வரத்து 2 டி.எம்.சி. ஆக அதிகரித்துள்ள நிலையில், ஜூலை 20- ஆம் தேதி முதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம், கிருஷ்ணராஜ சாகா் அணை ஆகஸ்ட் 3- ஆம் தேதிக்கு பிறகு நிரம்ப வாய்ப்புள்ளதால், மேட்டூா் அணையில் நீா்மட்டம் ஏறுமுகமாகவே இருக்கும் என்றாா் செல்வகுமாா்.

எனவே மேட்டூா் அணையில் நீா்மட்டம் குறைந்து வந்தாலும், ஆகஸ்ட் மாதத்தில் உயர வாய்ப்புள்ளதால் நிகழாண்டும் குறுவை சாகுபடி வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com