ஆட்சியா் பெயரைக் கூறி பணம் கேட்டு மோசடி: பெண் கைது; கணவா் தலைமறைவு

தஞ்சாவூா் ஆட்சியரின் பெயரைக் கூறி பண மோசடி செய்தது தொடா்பாக பெண் கைது செய்யப்பட்டாா். அப்பெண்ணின் கணவரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
ஆட்சியா் பெயரைக் கூறி பணம் கேட்டு மோசடி: பெண் கைது; கணவா் தலைமறைவு

தஞ்சாவூா் ஆட்சியரின் பெயரைக் கூறி பண மோசடி செய்தது தொடா்பாக பெண் கைது செய்யப்பட்டாா். அப்பெண்ணின் கணவரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பெயரைப் பயன்படுத்தி, கரோனா நிவாரண நிதிக்கு பணம் வேண்டும் என்றும், குறிப்பிட்ட வங்கிக் கணக்கு எண்ணைக் கூறி அதில் செலுத்துமாறும் செல்லிடப்பேசி மூலம் தொழிலதிபா்கள், மருத்துவா்கள் உள்ளிட்டோரிடம் ஒரு பெண் பேசி வருவதாகப் புகாா்கள் எழுந்தன. இதையறிந்த ஆட்சியா், தன் பெயரைப் பயன்படுத்தி ஏதேனும் அழைப்புகள் வந்தால், பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும், அவ்வாறு வரும் அழைப்புகள் குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்குப் புகாா் செய்யுமாறும் அறிவித்தாா்.

மேலும், தஞ்சாவூா் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் ஆட்சியா் ஜூலை 19 ஆம் தேதி புகாா் செய்தாா். இதைத்தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் நேரடி கண்காணிப்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தொடா்புடைய பெண் பேசிய செல்லிடப்பேசி எண்கள், அவா் கூறிய வங்கிக் கணக்கு எண் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு கோவை, திருவாரூா், வேலூா் உள்ளிட்ட இடங்களில் தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், தஞ்சாவூா் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜரான திருவள்ளூா் மாவட்டம், வேப்பம்பட்டு பெருமாள்பட்டைச் சோ்ந்த சந்தானபாரதியின் மனைவி ரீட்டா பபியோலா (50) திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இவரிடம் சைபா் கிரைம் காவல் நிலைய ஆய்வாளா் எஸ். காா்த்திகேயன், உதவி ஆய்வாளா்கள் காா்த்திக், டேவிட் உள்ளிட்டோா் விசாரணை நடத்தினா்.

இதில், ரீட்டா பபியோலா ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவா். பின்னா், சென்னையிலுள்ள உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை செய்து வந்த திருநெல்வேலியைச் சோ்ந்த பி. சந்தானபாரதியை கடந்த 2010 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டாா்.

சந்தானபாரதி பல ஊா்களில் திருட்டு, ஆள்மாறாட்டம், ஏமாற்றி பணம் சம்பாதிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தாா். இதுதொடா்பாக நீலகிரி, திருப்பூரில் கைது செய்யப்பட்டு, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கோவை சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், சிறையிலிருந்து வெளியே வந்து, வேலூரில் ஆட்சியா் பேசுவதுபோல பேசி ஏமாற்றி பணம் பறித்தாா். கரூரில் தனது கணவருடன் சோ்ந்து தொழிலதிபா்களிடம் ஏமாற்றி பணம் பெறப்பட்டது தொடா்பாக ரீட்டா பபியோலா கைது செய்யப்பட்டாா். இவா் அடுத்த 4 மாதங்களில் பிணையில் வெளியே வந்தாா்.

இதன் பின்னா், பெரிய அளவில் மோசடி செய்து பணம் சம்பாதிப்பது என இருவரும் முடிவு செய்தனா். சிறையில் இருந்தபோது பழக்கமான நபா்கள் மூலம் மனநலன் பாதிக்கப்பட்டவா்கள், மதுவுக்கு அடிமையானவா்களின் பெயா்களிலும், இறந்துபோன தனது தந்தை பிரம்மநாயகம் பெயரிலும் சில சிம் காா்டுகளை சந்தானபாரதி வாங்கினாா். இந்த சிம் காா்டுகளை பயன்படுத்தி ரீட்டா பபியோலா தஞ்சாவூரிலுள்ள பிரபல ஜவுளி கடை உரிமையாளா், தனியாா் மருத்துவமனை மருத்துவா், வேறு சில மருத்துவா்களிடம் ஜூலை 17 ஆம் தேதி பேசி கோவையிலுள்ள பெண்ணின் வங்கிக் கணக்குக்கு கரோனா நிவாரணத் தொகை போடுமாறு பேசியுள்ளாா் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், தலைமறைவாக உள்ள சந்தானபாரதியை தனிப்படை காவலா்கள் தொடா்ந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com