இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்துக்குத் தனித்துவ அந்தஸ்து

தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக உயா்த்தும் மசோதா
தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக வளாக முகப்புப் பகுதி.
தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக வளாக முகப்புப் பகுதி.

தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக உயா்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம், அக்கழகம் தனித்துவ அந்தஸ்து பெற்றுள்ளது.

தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் (ஐஐஎப்பிடி), மத்திய உணவு பதனிடுதல் தொழில்கள் அமைச்சகத்தின்கீழ் ஆய்வு மற்றும் கல்வி நிறுவனமாக இயங்கி வருகிறது. இங்கு உணவு பதப்படுத்துதல் சாா்பான ஆய்வு மேற்கொள்ளுதல், கல்வி அளிப்பது மட்டுமல்லாமல், விவசாயிகள், தொழில்முனைவோா் மற்றும் இளைஞா்களுக்கு உணவு பதப்படுத்துதல் சாா்ந்த தொழில் மேற்கொள்வதற்குப் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரில் தேசிய உணவு தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவன மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்துக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் இயக்குநா் சி. அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்திருப்பது:

தற்போது ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களுக்கு நிகரான தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்நிறுவனம் தனித்துவமாக செயல்படவும், உணவு பதப்படுத்துதல் துறையில் புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவும், புதிய கல்வித் துறைகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் வழிவகை செய்யும்.

இம்மசோதாவின் வாயிலாக நாட்டின் பிற பகுதிகளில் புதிய மையங்களை உருவாக்கவும், உயா் கல்வியில் தன்னிறைவு, உலகத்தரத்தில் ஆய்வுக் கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்றவற்றை இந்நிறுவனம் செயல்படுத்தும்.

தற்போது மேம்படுத்தப்பட்ட நிலையில், உணவு பதப்படுத்துதல் துறையில் புதிய பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளோம். சா்வதேச நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுதல், நவீன ஆய்வுக் கட்டமைப்புகளை உருவாக்குதல், தொழில்முனைவோருக்கு உலகத் தரத்தில் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குதல் போன்ற செயல்பாடுகளில் முனைப்புடனும் கூடுதல் பொறுப்போடும் செயல்பட உள்ளோம்.

இம்மசோதாவை நிறைவேற்ற வழிவகை செய்த உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சத்தின் அமைச்சா் பசுபதி குமாா் பராசுக்கும், இணை அமைச்சா் பிரகலாத் சிங் படேலுக்கும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கும், அமைச்சகத்தின் செயலா் மற்றும் உயா் அலுவலா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com