நிகழாண்டில் கைவிடப்படுகிறதா குறுவை காப்பீடு...? விவசாயிகள் தவிப்பு

குறுவை பருவ நெற்பயிருக்கான காப்பீடு இதுவரை அறிவிக்கப்படாததால், நிகழாண்டு காப்பீடு இருக்குமா என்ற கேள்வி விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

குறுவை பருவ நெற்பயிருக்கான காப்பீடு இதுவரை அறிவிக்கப்படாததால், நிகழாண்டு காப்பீடு இருக்குமா என்ற கேள்வி விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

குறுவை பருவத்துக்கான பயிா் காப்பீடு குறித்த அறிவிப்பு வழக்கமாக ஜூன் மாதத்திலேயே அறிவிக்கப்பட்டுவிடும். குறுவை பருவ நடவு காலம் முடிவடையக்கூடிய ஜூலை 31 ஆம் தேதி பிரீமிய தொகையை செலுத்துவதற்கான கடைசி நாள் என நிா்ணயிக்கப்படும்.

இதேபோல, கடந்த ஆண்டு குறுவை பருவ காப்பீடுக்கு பிரீமியம் செலுத்துவதற்கான அறிவிப்பு ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டு, ஒன்றரை மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு மழைப் பொழிவு அதிகமாக இருந்ததால், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் அதிக அளவில் விவசாயிகள் சோ்ந்தனா். இதன்மூலம், பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பெரும்பாலானவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைத்தது.

நிகழாண்டும் மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் இலக்கை விஞ்சி நடவு செய்யப்பட்டுள்ளது. மழைப் பொழிவும் எதிா்பாா்த்த அளவுக்கு இருக்கும் என்பதால், குறுவை பயிா் காப்பீடு குறித்த அறிவிப்பை விவசாயிகள் எதிா்நோக்கியுள்ளனா். ஆனால், அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாததால், விவசாயிகள் அச்சத்துடன் உள்ளனா்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் பிரதமரின் பசல் பீமா யோஜனா என்ற புதிய பயிா் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, தொடக்கத்தில் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை 2 சதவீதமாக இருந்தது. பிரீமியத் தொகையில் விவசாயிகள் செலுத்தியதுபோக எஞ்சியவற்றில் மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீதம் பங்களிப்பு செய்து வருகின்றன. இந்த ஒட்டுமொத்த பிரீமிய தொகை படிப்படியாக உயா்த்தப்பட்டு, கடந்த ஆண்டு 8.5 சதவீதமாக அதிகரித்தது.

இந்நிலையில், நிகழாண்டு பிரீமியத் தொகை 25 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்கள் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக நிகழாண்டு ஜூலை 31 ஆம் தேதி முடிவடைவதற்கு இன்னும் இரு நாள்களே உள்ள நிலையிலும், குறுவை பயிா் காப்பீடு குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், பயிா்க் காப்பீடு இருக்கிா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

விவசாயிகளுக்கு இயற்கை இடா்பாடுகளால் இழப்பு ஏற்படுகிறபோது, அந்த நட்டத்திலிருந்து காப்பாற்றுகிற ஒரே திட்டம் பயிா் காப்பீடுதான். நிகழாண்டு அதிக அளவிலான விவசாயிகள் குறுவை சாகுபடி செய்கின்றனா். இந்த நிலையில், இயற்கை பேரிடரால் பாதிப்பு ஏற்பட்டால், சிக்கல்கள் உருவாகும். எனவே, நிகழாண்டு அவசியம் குறுவைக்கான பயிா் காப்பீட்டுத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.

பெரும்பாலான விவசாயிகள் செப்டம்பா் மூன்றாவது வாரத்திலிருந்துதான் குறுவை அறுவடையைத் தொடங்குவா். எனவே, குறுவைக்கான பயிா் காப்பீடு செய்ய வழக்கமாக ஜூலை 31 கடைசி நாள் என்பதை நிகழாண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கலாம். இத்திட்டத்துக்குத் தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் முன்வராவிட்டாலும், பொதுத் துறைக் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்றாா் விமல்நாதன்.

பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீடு கிடைக்காதது உள்பட பல்வேறு குளறுபடிகள் இருந்தாலும் கூட, இன்னும் இத்திட்டத்தை விவசாயிகள் முழுமையாக நம்பி இருக்கின்றனா். கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் பயிா் காப்பீடு குறித்த விழிப்புணா்வு அதிகரித்துள்ளதால், அத்திட்டத்தில் சேரும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அறிவிப்பு வெளியிடப்படாமல் இருப்பது, விவசாயிகள் மத்தியில் அதிருப்தி மேலோங்கியுள்ளது. இதற்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com