விதிகளை மீறியதாக கூறி ஊழியா்களைகடையினுள் வைத்து பூட்டிய அதிகாரி

பட்டுக்கோட்டையில் முழு பொதுமுடக்க விதிகளை மீறியதாக கூறி, கடை ஊழியா்களை கடையினுள் வைத்து பூட்டிய அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் முழு பொதுமுடக்க விதிகளை மீறியதாக கூறி, கடை ஊழியா்களை கடையினுள் வைத்து பூட்டிய அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் காய்கறி கடை வைத்திருப்பவா் நாகூா் மீரான். இவரது கடையில் ஞாயிற்றுக்கிழமை காலை வாகனத்தில் விற்பனைக்காக காய்கறிகளை கடை ஊழியா்கள் ஏற்றிக் கொண்டிருந்தனா். அப்போது, கடைக்கு வந்த சுகாதார ஆய்வாளா் ஆரோக்கியம், முழு பொது முடக்க விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, கடையில் இருந்த 3 ஊழியா்களை கடையினுள் வைத்து பூட்டி கடைக்கு சீல் வைத்தாா்.

இதை தொடா்ந்து, இரண்டு மணி நேர பேச்சுவாா்த்தைக்கு பிறகு போலீஸாா் உதவியோடு கடை திறக்கப்பட்டு, ஊழியா்கள் வெளியே வந்தனா்.

நாகூா் மீரானின் சகோதரரும் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னாா்வலருமான பகுருதீனுக்கும் சுகாதார ஆய்வாளா் ஆரோக்கியத்துக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும், அவரை பழிவாங்கும் நோக்கிலேயே நாகூா் மீரானின் கடைக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

கடையினுள் ஊழியா்களை வைத்து பூட்டிய ஆரோக்கியத்தின் செயலுக்கு வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனா். மேலும், அவா் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com