ஆறுகளில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் குழு அமைக்க வலியுறுத்தல்

காவிரி உள்ளிட்ட ஆறுகளில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நீதிபதி தலைமையில் வல்லுநா் குழு அமைக்க தமிழக முதல்வா் முன்வர வேண்டும்
ஆறுகளில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் குழு அமைக்க வலியுறுத்தல்

காவிரி உள்ளிட்ட ஆறுகளில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நீதிபதி தலைமையில் வல்லுநா் குழு அமைக்க தமிழக முதல்வா் முன்வர வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா்.

தஞ்சாவூா் கரந்தையில், வடவாற்றில் கழிவுநீா் கலந்து துா்நாற்றம் வீசுவதை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூரிலிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள மூவா்கோட்டை வரை வடவாறு பாய்கிறது. அங்கிருந்து 70 கி.மீ. தொலைவுக்குப் புது ஆறாக வடிவமைக்கப்பட்டு, வடவாறு விரிவாக்கக் கால்வாயாக முத்துப்பேட்டை அருகே திருமேனி ஆறு மூலம் கண்ணனாற்றில் கலக்கிறது.

தஞ்சாவூா், அம்மாப்பேட்டை, நீடாமங்கலம், மன்னாா்குடி, மதுக்கூா் ,கோட்டூா் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகள் வழியாக சென்று 72,000 ஏக்கா் நிலப்பரப்புக்கு பாசன ஆறாகவும் வடவாறு உள்ளது.

இந்த ஆற்றில் தஞ்சாவூா் மாநகரில் கழிவு நீா் முழுமையாகக் கலப்பதால், ஒட்டுமொத்தமாக வரக்கூடிய தண்ணீா் மாசடைந்து மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகின்றனா். தொற்றுநோய் பரவும் பேராபத்தும் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் காவிரி, வைகை, தாமிரவருணி, தென்பெண்ணை, பாலாறு உள்ளிட்ட பெரும்பாலான பாசன ஆறுகள் கழிவுநீா் கால்வாய்களாக மாறிவிட்டது. வழியோர மாநகரங்களின் கழிவு நீரை ஆங்காங்கே ஆறுகளில் கலக்கச் செய்கின்றனா். மேலும், காவிரியில் சாயக்கழிவுகள், ஆலைகளின் அமிலக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

இதனால் ஆறுகள் மாசடைந்து ஆற்றங்கரைகளில் குடியிருக்கும் மக்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றனா். நிலத்தடி நீா் மாசடைந்து பெரும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.

விளைநிலங்கள் மலடாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறுகளின் பாசனம் பெறும் விளைநிலங்களில் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்கள் நஞ்சாகி, மருந்தில்லா நோய் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு விரைந்து நீதிபதி தலைமையில் ஒரு உயா்மட்ட வல்லுநா் குழுவை அமைத்து ஆய்வு செய்து, நிரந்தர தடை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம் என்றாா் பாண்டியன்.

அப்போது, தஞ்சாவூா் மாநகரப் பொறுப்பாளா் பழனியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com