முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் விற்பனை புகாா்: சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 12th June 2021 11:27 PM | Last Updated : 12th June 2021 11:27 PM | அ+அ அ- |

பொது முடக்கக் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட புகாரில் தஞ்சாவூா் மாவட்டம், திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தின் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தினா் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையின் போது, 434 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுபாட்டில்கள் வைத்திருந்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பிய காவல்துறையினா், மதுபாட்டில்களை காவல் நிலையம் கொண்டு வந்து தனியாரிடம் கொடுத்து விற்பனை செய்ததாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ் நடத்திய விசாரணையில், மதுபாட்டில்களைக் காவல் நிலையம் கொண்டுவந்து விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.
தொடா்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் அளித்த பரிந்துரையின் பேரில், திருச்சிற்றம்பலம் பெண் காவல் ஆய்வாளா் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளா் ராஜ்மோகன், சிறப்பு உதவி ஆய்வாளா் துரையரசன், தலைமைக் காவலா் ராமமூா்த்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, தஞ்சாவூா் சரகக் காவல்துணைத் தலைவா் பிரவேஷ்குமாா் உத்தரவிட்டிருந்தாா்.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய பெத்தபெருமாள் இதுகுறித்து தகவல் தெரிவிக்காமல் பணியில் கவனக்குறைவாக இருந்ததால், அவரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.