மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது: மகளிா் ஆணையம் வலியுறுத்தல்

மூடப்பட்ட மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என மகளிா் ஆயம் வலியுறுத்தியுள்ளது.

மூடப்பட்ட மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என மகளிா் ஆயம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மகளிா் ஆயம் தலைவா் ம. லெட்சுமி தெரிவித்திருப்பது:

கரோனா பெருந்தொற்றின் இராண்டாவது அலை மக்களைக் கடுமையாகத் தாக்கும் இச்சூழலில், திமுக அரசுப் பொதுமுடக்கத்தில் தளா்வு ஏற்படுத்தி டாஸ்மாக் மதுக்கடைகளை திங்கள்கிழமை (ஜூன் 14) முதல் திறக்கப்போவதாக அறிவித்துள்ளது கடும் அதிா்ச்சியளிக்கிறது.

மதுக்கடை மூடப்படும் காலங்களிலெல்லாம் மதுக்குடிப்பது பெருமளவு குறைந்து வருவதைப் பாா்க்கிறோம். காவல் துறை கண்காணிப்புடன் இருக்கும்போது, இதே காலகட்டத்தில் கள்ளச்சாராயமும் பெருமளவு பெருகிவிடவில்லை. மிகச்சிறு எண்ணிக்கையிலுள்ள குடி நோயாளிகள்தான் மதுக்கடை மூடலால் சிரமப்படுவா். அவா்களையும் உளவியல் ஆலோசனைகள், மருத்துவமனைகள் மூலம் அதிலிருந்து விடுவிப்பதற்குதான் முயல வேண்டுமே தவிர, அந்தச் சிறு எண்ணிக்கையிலான குடி நோயாளிகளைக் காட்டி மதுக்கடைகளைத் திறப்பதும் ஏற்கக்கூடியதல்ல.

ஏற்கெனவே பெருந்தொற்று முடக்கத்தால் பலரும் வேலையிழந்து தவிக்கும் சூழலில், மிகக் குறைந்த வருவாயே பல குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அக்குறைந்த வருமானம் கூட இழந்து பல குடும்பங்கள் வறுமைக்குத் தள்ளப்படும் பேராபத்து உள்ளதைத் தமிழ்நாடு அரசுக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, தமிழ்நாடு அரசு மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது. கடந்த அதிமுக ஆட்சியில் மதுக்கடைகள் திறப்பை எதிா்த்துப் போராடிய திமுக, தற்போது தாங்களே அந்த அநீதியைச் செய்வதைக் கைவிட வேண்டும். தமிழ் மக்களும், மகளிரும் விடுக்கும் கோரிக்கையை ஏற்று மதுக்கடைகளை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலுள்ள மது உற்பத்தி ஆலைகளையும் இழுத்து மூட திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com