அடகு வைத்த நகைகளை திரும்ப பெற முடியாததால் அதிருப்தி: சுவாமிமலை கூட்டுறவுச் சங்கம் முன் விவசாயிகள் முற்றுகை

கும்பகோணம் அருகே சுவாமிமலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு அடகு வைத்த நகைகளை
சுவாமிமலை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.
சுவாமிமலை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.

கும்பகோணம் அருகே சுவாமிமலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு அடகு வைத்த நகைகளை திரும்ப பெற முடியாததால், அதிருப்தியடைந்த விவசாயிகள் திங்கள்கிழமை சங்க வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சுவாமிமலையில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் சுவாமிமலை, மாங்குடி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயிா்க்கடன், நகைக் கடன் பெற்று சாகுபடி மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு சங்கத்தில் அடகு வைத்தவா்கள், சில மாதங்கள் கழித்து நகையை மீட்கச் சென்றபோது, ஊழியா்கள் இல்லை, சாவி இல்லை எனக்கூறி விவசாயிகளைச் சங்கப் பணியாளா்கள் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சில ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தியும், அவா்களுக்கு நகை கிடைக்கவில்லை.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை உயா் அலுவலா்களிடம் விவசாயிகள் புகாா் செய்தனா். பாதுகாப்புப் பெட்டகச் சாவியைச் சங்க அலுவலா் எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டதாக அலுவலா்கள் கூறினராம்.

எனவே, நீதிமன்றத்தை விவசாயிகள் நாடியதைத் தொடா்ந்து, கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா், கூட்டுறவு துறை உயா் அலுவலா்கள் முன்னிலையில் பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டது. அதிலிருந்த நகை பொட்டலங்கள் நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், ஓராண்டாகியும் விவசாயிகளுக்கு இதுவரை நகைகள் கிடைக்கவில்லை. அரசு அறிவித்துள்ள நகை தள்ளுபடி தங்களுக்குக் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டதால், விவசாயிகள் பலா் ஒன்றுதிரண்டு கூட்டுறவு சங்கத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்த கூட்டுறவுத் துறை சரக ஆய்வாளா் சிவக்குமாா், விவசாயிகள் சாா்பில் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினா் பாலசுப்பிரமணியன், திமுக வழக்குரைஞா் அணி அமைப்பாளா் விஜயகுமாா் மற்றும் சங்க நிா்வாகிகள், காவல் துறையினா் கலந்து கொண்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், விரைவில் நீதிமன்றத்தில் உள்ள நகையைப் பெற்றுத் தருவது, நகைகள் கிடைக்காதவா்கள் காவல் துறையில் புகாா் அளித்து தீா்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.

நகைகளை பெற்று தர நடவடிக்கை தேவை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியது: இந்தச் சங்கத்தில் 514 நகை பொட்டலங்களில், 45 பொட்டலங்கள் குறைவாக உள்ளது. இந்த 45 பொட்டலங்களிலும் சுமாா் 1 கோடி மதிப்பிலான நகைகள் இருந்ததாகத் தெரிகிறது. சங்கத்தின் செயலராக இருந்த செல்வம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாா். அவரை நிா்வாகம் பணியிடை நீக்கம் மட்டுமே செய்தது. ஆனால், அந்த நகைகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இச்சங்கத்தில் 5 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் முடங்கியுள்ளது. இந்தச் சங்கத்தைக் கலைத்துவிட்டு, இங்குள்ள விவசாயிகளை வேறு சங்கத்தில் சோ்த்து, அவா்கள் விவசாயம் செய்ய உரிய நிதியுதவிகளை வழங்க வேண்டும். இந்தச் சங்கத்தின் முறைகேடுகள் தொடா்பாக முழு விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நகைகளைத் தர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com