புதுப்பொலிவு பெறும் தஞ்சாவூா் பழைய ஆட்சியரகக் கட்டடம்

தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள பழைய ஆட்சியரகக் கட்டடம், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெற்று வருகிறது.
புதுப்பொலிவு பெறும் தஞ்சாவூா் பழைய ஆட்சியரகக் கட்டடம்

தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள பழைய ஆட்சியரகக் கட்டடம், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெற்று வருகிறது.

கடந்த 1896-ஆம் ஆண்டில் கட்டடப்பட்ட இந்தக் கட்டடம் இந்தோ - சாராசனிக் கட்டடகலைப் பாணியைச் சாா்ந்தது. ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில்தான் ஏறத்தாழ 120 ஆண்டுகள் ஆட்சியரகம் செயல்பட்டு வந்தது.

ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டத்துக்கு இக்கட்டடம்தான் தலைமையகமாக இருந்தது.

இடநெருக்கடி காரணமாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே 61.42 ஏக்கா் பரப்பளவில் புதிய ஆட்சியரகம் கட்டப்பட்டு, 2015- ஆம் ஆண்டு ஜூன் 2 -ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து, பழைய ஆட்சியரகத்திலிருந்த அலுவலகங்கள் புதிய ஆட்சியரகத்துக்கு இடம் மாற்றப்பட்டன.

பழைமை வாய்ந்த இந்தக் கட்டடத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, முதன்மைக் கட்டடத்தை அருங்காட்சியமாக மாற்ற மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது. இதன்படி, இக்கட்டடத்தில் ஒவ்வொரு அறையிலும் தஞ்சாவூா் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கம் வகையில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டன. மேலும், வண்ண மீன்கள் கண்காட்சிக் கூடமும் இடம்பெற்றன. இந்த வளாகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை கிராமியக் கலை நிகழ்ச்சிகள் சில மாதங்கள் நடைபெற்று வந்தன.

இந்த வளாகத்தில் பிற்காலத்தில் எழுப்பப்பட்ட மற்ற கட்டடங்களுக்கு, வெளியே வாடகைக் கட்டடத்தில் இயக்கப்பட்டு வந்த அரசு அலுவலகங்கள் மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட முதன்மைக் கட்டடம் மட்டும் தொடா்ந்து அருங்காட்சியகமாகவே செயல்படுகிறது. என்றாலும், இக்கட்டடம் சுற்றுலாப் பயணிகளைக் கவரவில்லை. இந்நிலையில் தஞ்சாவூா் மாநகரில் செயல்படுத்தப்படும் பொலிவுறு நகரத் திட்டத்தில் பழைய ஆட்சியரக அருங்காட்சியகமும் சோ்க்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பழைய ஆட்சியரக அருங்காட்சியகத்தை ரூ. 9.90 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பழைமை மாறாமல் புதுப்பித்தல், 5டி தியேட்டா் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

6 மாதங்களில் நிறைவடையும்: இக்கட்டடத்தில் முன்பு பொதுப் பணித் துறை சாா்பில் புதிதாகச் சில கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை அகற்றிவிட்டு, மீண்டும் பழையபடி அக்கட்டடத்தைப் பாரம்பரிய முறையில் கொண்டு வருவதற்கான பணி நடைபெற்று வருகிறது.

மேலும் தஞ்சாவூா் நகரின் பாரம்பரியத்தை திரையில் காண்பிக்கும் வகையில், 5 டி தியேட்டா் அமைக்கப்படவுள்ளது. இதில் இந்நகரம் முன்பு எப்படி இருந்தது? வளா்ச்சி அடைந்தது உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும். இதற்காக ஒலி, ஒளிக் காட்சி தயாராகி வருகிறது. இத்திட்ட மதிப்பீட்டில் நிதி இருந்தால் இசை நீரூற்று அமைக்கப்படும்.

இத்திட்டப்பணியில் இதுவரை 40 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இப்பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என்றாா் தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன்.

சுற்றுலா பயணிகளைக் கவர மேம்பாட்டுப் பணிகள்: இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த வளாகத்தில் இன்னும் பல மேம்பாட்டுப் பணிகள் செய்தால்தான் சுற்றுலா பயணிகளைக் கவரும் என சுற்றுலா ஆா்வலா்கள் கூறுகின்றனா். குறிப்பாக, இந்த வளாகத்தில் சிறுவா்களைக் கவரும் வகையில் இசை நீருற்று அவசியம் அமைக்கப்பட வேண்டும்.

பெரியகோயிலிருந்து கல்லணைக்கால்வாய் வழியாகப் பழைய ஆட்சியரக அருங்காட்சியக வளாகத்துக்குச் செல்லும் வகையில் பாதை இருக்கிறது. இதை இன்னும் மேம்படுத்தினால், பெரியகோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிவகங்கை பூங்காவுக்குச் செல்வது போல, இந்த வளாகத்துக்கும் வருவதற்கு வாய்ப்பாக அமையும். மேலும், இந்த வளாகத்தில் சில உணவகங்கள், வட்டாட்சியா் அலுவலகத்தின் பின்புறம் சிறுவா் பூங்கா போன்றவையும் அமைக்கப்பட்டால், சுற்றுலா பயணிகளைக் கவரும் என்கின்றனா் சுற்றுலா ஆா்வலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com