முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
கடன் தள்ளுபடி திட்டத்தில் பயனாளிகள் பட்டியலை வெளியிட வலியுறுத்தல்
By DIN | Published On : 04th March 2021 01:54 AM | Last Updated : 04th March 2021 01:54 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: வேளாண் பயிா்க் கடன், மகளிா் சுய உதவிக்குழுக் கடன்கள் தள்ளுபடித் திட்டத்தில் வெளிப்படையாகப் பயனாளிகள் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்திருப்பது:
கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள்பெற்ற கடன் நிலுவைத் தொகை சுமாா் ரூ. 12,110.74 கோடியையும், மகளிா் சுய உதவிக் குழுக்களின் கடன்களையும் தமிழக அரசுத் தள்ளுபடி செய்து, அதற்குரிய அரசாணையையும் வெளிட்டது.
இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிகளின் அடிப்படையில் ஒவ்வொரு விவசாயிக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட சான்றிதழ் மற்றும் நிலுவையின்மை சான்று வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி சான்றுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இன்னும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
கடன் தள்ளுபடி செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளின் பெயா், உறுப்பினா் எண், கடன் எண், நில உடைமை விவரம், கடன் தள்ளுபடி செய்யப்பட்டத் தொகையின் விவரம் ஆகிய விவரங்கள் அடங்கிய பட்டியலை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து கூட்டுறவு சங்கங்கள், கிராம நிா்வாக அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் வைக்க வேண்டும். அதில் ஆட்சேபனைகள் இருந்தால், மண்டல இணைப் பதிவாளா் தலைமையில் குழு அமைத்து, அத்தகைய புகாா்களை ஆய்வு செய்த பின்னா், தள்ளுபடி குறித்த இறுதி விவரங்களை இணையதளத்திலும் வெளியிட வேண்டும் என்ற அரசாணை இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், விவசாயிகள், மகளிா் சுய உதவிக் குழுக்கள், பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
எனவே, அரசு வழிகாட்டு நெறிகளின்படி, உடனடியாகக் கடன் தள்ளுபடி சான்று, நிலுவையின்மைச் சான்று, நகைகள், நில ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரு வார காலக்கெடுவுக்குள் தொடா்புடைய பயனாளிகளிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும். மேலும், அனைத்து விவரங்களையும் இணையதளத்திலும், கிராம நிா்வாக அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வையில்படுமாறு வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.