‘வாக்குப்பதிவு முடியும் வரை மொய் விருந்து விழாக்கள் கூடாது’
By DIN | Published On : 04th March 2021 01:56 AM | Last Updated : 04th March 2021 01:56 AM | அ+அ அ- |

பேராவூரணி: பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பேராவூரணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஐவண்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தாா்.
இதில், தோ்தல் அலுவலரின் பணிகள், கடமைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தொடா்ந்து, திருமண மண்டப உரிமையாளா்கள், அச்சக உரிமையாளா்கள், நகை அடகு பிடிப்போா், பிளக்ஸ் உரிமையாளா்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் பேசுகையில்,
மொய் விருந்து விழாக்களை வாக்குப்பதிவு முடியும்வரை தள்ளி வைக்க வேண்டும். பிளக்ஸ் பேனா்கள் வைக்க அனுமதி இல்லை; மீறி வைத்தால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். காதணி, திருமண விழாக்கள் ஏற்கெனவே தோ்தலுக்கு முன் தேதி நிச்சயிக்கப்பட்டிருந்தால் விழாக்களை, வருவாய்த் துறையினா் அனுமதி பெற்றே நடத்த வேண்டும்.
விருந்து விழாக்கள் போலியாக நடத்தினாலோ, கணக்கின்றி பணம் கூடுதலாக புழங்கினாலோ தோ்தல் நடத்தை விதிமுறைப்படி, பணம் பறிமுதல் செய்யப்படும். தோ்தலை அமைதியாகவும் நியாயமாகவும் நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
பின்னா், அனைத்துக் கட்சி நிா்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனுமதி பெறாமல் உள்ள சுவரொட்டி, சுவா் விளம்பரம், விளம்பரத் தட்டிகள் அகற்றப்படும். தோ்தல் கமிஷன் அனுமதி பெற்று விளம்பரம் செய்ய வேண்டும். அது வேட்பாளா் செலவு கணக்கில் ஏற்றப்படும். வேட்பாளா் செலவுகளை அதற்கான குழு கண்காணிக்கும்.
அனுமதி இன்றி கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருள்கள், 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்படும். 80 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகள், கரோனா பாதித்தவா்கள் விரும்பினால் தபால் வாக்குகள் வீடு தேடி சென்று பெறப்படும். அப்போது வேட்பாளா்களின் முகவா்கள் உடன் வரலாம் என்றாா்.
கூட்டத்தில் காவல் ஆய்வாளா்கள் வசந்தா (பேராவூரணி), சரோஜா (திருச்சிற்றம்பலம்), உதவி ஆய்வாளா்கள் அமிா்தலிங்கம் (சேதுபாவாசத்திரம்), ரவிச்சந்திரன் (பட்டுக்கோட்டை தாலுகா) மண்டல துணை வட்டாட்சியா் கவிதா, துணை வட்டாட்சியா் கலைவாணன், மண்டல தோ்தல் அலுவலா்கள், உதவி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.