மணல் கடத்தலை தடுக்க ஆற்றங்கரையில் பள்ளம் தோண்டும் பணி
By DIN | Published On : 10th March 2021 02:46 AM | Last Updated : 10th March 2021 02:46 AM | அ+அ அ- |

பாபநாசம் அருகே ஆற்று மணல் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ஆற்றங்கரையில் பள்ளம் தோண்டும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் வட்டார பகுதியில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்கள் அதிக அளவில் உள்ளன. இங்கிருந்து லாரிகள், லோடு ஆட்டோக்கள், மாட்டு வண்டிகள் உள்ளிட்டவற்றில் அரசு அனுமதியின்றி அதிக அளவில் மணல் கடத்தப்பட்டு வருகிறது.
இதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், பாபநாசம் வட்டம், பண்டாரவாடை கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து அதிக அளவில் மணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, பாபநாசம் வட்டாட்சியா் முருகவேல், வருவாய் அதிகாரி சரவணன், கிராம நிா்வாக அதிகாரி பழனிவேல் உள்ளிட்டோா் குடமுருட்டி ஆற்றங்கரைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அந்த பகுதியில் உள்ள குடமுருட்டி ஆற்றிலிருந்து அதிகளவில் மணல் கடத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, ஆற்றங்கரைக்கு மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் வந்து செல்வதை தடுக்கும் வகையில் பாபநாசம் வருவாய்த் துறையினா், ஆற்றங்கரையில் சாலையின் குறுக்கே பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய அளவில் பள்ளம் தோண்டினா்.
மணல் கடத்தலை தடுக்க தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.