முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
தஞ்சாவூரில் உப்பு சத்தியாகிரக நினைவு சைக்கிள் பயணம்
By DIN | Published On : 14th March 2021 01:24 AM | Last Updated : 14th March 2021 01:24 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற சைக்கிள் பயணத்தில் பங்கேற்றவா்கள்.
இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் உப்பு சத்தியாகிரக நினைவு சைக்கிள் பயணம் தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 2022 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதியுடன் 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 259 உறுப்பினா்கள் அடங்கிய தேசிய உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டு, தேசிய மற்றும் சா்வதேச அளவில் விழா கொண்டாடப்படவுள்ளது.
இதில் குஜராத் மாநிலம், சபா்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி வரையிலான நடைபயணத்தை பிரதமா் தொடங்கி வைத்தாா். இதையொட்டி, திருச்சி முதல் வேதாரண்யம் வரை நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க உப்பு சத்தியாகிரக யாத்திரையை நினைவுகூரும் வகையில் , திருச்சியிலிருந்து சைக்கிள் பயணம் மாா்ச் 12 -ஆம் தேதி தொடங்கியது.
தஞ்சாவூா் மாவட்டம், கல்லணைக்கு வந்த இப்பயணக் குழுவினா் கோவிலடி, திருக்காட்டுப்பள்ளி வழியாக திருவையாறுக்கு மாா்ச் 12- ஆம் தேதி வந்தனா்.
இதைத்தொடா்ந்து தஞ்சாவூா் பழைய மாவட்ட ஆட்சியரகத்தில் சைக்கிள் பேரணியை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த சைக்கிள் பேரணி அய்யம்பேட்டை, பாபநாசம், நல்லூா், தாராசுரம், கும்பகோணம் வழியாக வலங்கைமானுக்குச் சென்றது.
இப்பேரணியில் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி, பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, பெரியாா் மணியம்மை பாலிடெக்னிக் கல்லூரி, திருவையாறு அரசா் கல்லூரி, திருவையாறு அரசு இசைக் கல்லூரி, கரந்தை உமா மகேசுவரனாா் கல்லூரி, ராஜகிரி தாவுத் பாட்ஷா கல்லூரி, கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி, மாஸ் கல்லூரி, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி, பான் செக்கா்ஸ் கல்லூரி, சாமி விவேகானந்தா் கல்லூரி ஆகியவைற்றைச் சோ்ந்த ஏறத்தாழ 1,000 போ் நடைபயணம் மற்றும் சைக்கிள் பயணத்தில் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சஞ்சய் சேகா், மாவட்ட வருவாய் அலுவலா் பி. அரவிந்தன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. பழனி, திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) கதிரேசன், மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.