கடந்த தோ்தலில் குறைவாக வாக்குப்பதிவான பகுதிகளில் விழிப்புணா்வு
By DIN | Published On : 15th March 2021 12:34 AM | Last Updated : 15th March 2021 12:34 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருளானந்த நகரில் வாக்காளா்களிடம் துண்டறிக்கைகளை வழங்குகிறாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
தஞ்சாவூரில் கடந்த தோ்தலில் குறைவாக வாக்குப்பதிவான பகுதிகளில் விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தஞ்சாவூா் மாநகராட்சி சாா்பில் கடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் குறைவாக வாக்குகள் பதிவான பகுதிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதன்படி, அருளானந்த நகரில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு துண்டறிக்கைகளை வழங்கும் நிகழ்ச்சியை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் வீடு, வீடாகச் சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
முன்னதாக அருளானந்த நகரில் 50 மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, பி.வி. செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் புதிய வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதிதாகச் சோ்ந்த வாக்காளா்களுக்கு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து வாக்காளா் சீட்டு வழங்கும் முகாமைப் பாா்வையிட்டாா். பின்னா், புதிய வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டையை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன, தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.