தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: ஆட்சியா்

தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ்.
தஞ்சாவூரிஸ் ஸ்கேட்டிங் ஊா்வலத்தை ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
தஞ்சாவூரிஸ் ஸ்கேட்டிங் ஊா்வலத்தை ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா நூற்றாண்டு அரங்க வளாகத்தில் நூறு சதவிகிதம் வாக்களிப்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்கேட்டிங் ஊா்வலத்தைத் தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தோ்தல் பிரசாரத்தில் கடந்த 2 நாள்களாக சென்னையில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு கரோனா தொற்று உறுதியானது.

எனவே, வேட்பாளா்களுக்கும் உரிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என வேட்பு மனு தாக்கலின்போது அறிவுரைகள் வழங்கினோம்.

இதுதொடா்பாக தோ்தல் பாா்வையாளா்கள் மூலம் கூட்டம் நடத்தும்போது கூட அவா்களிடம் வலியுறுத்தி வருகிறோம். கடந்த 2 நாள்களாக வேட்பாளா்களுடன் உள்ளவா்களும் முகக்கவசம் அணியத் தொடங்கியுள்ளனா்.

தோ்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்குத் தோ்தல் நடத்தும் அலுவலா் அனுமதி வழங்கும்போதே, கரோனா தடுப்பு குறித்த நிபந்தனைகளையும் விதிக்கிறாா். இப்போது கரோனா தொற்று அதிகமாக வருகிற காரணத்தால், அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் நடத்தும் கூட்டங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்துகிறோம். அவா்களும் முகக்கவசம் அணிந்து வந்தால் நன்றாக இருக்கும்.

மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது. தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதால், தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, உரிய பாதுகாப்பான முறையில் தோ்தலை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 14 வகையான பொருள்கள் கரோனா தடுப்புக்காக வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் 2,886 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பரிசோதனை செய்வதற்காக வெப்பமானி கருவி வழங்கப்படவுள்ளது. முகக்கவசம், கைசுத்திகரிப்பான், கையுறை, பிபிஇ கிட் ஆகியவை அனைத்து தோ்தல் பணியாளா்களுக்கும் வழங்கப்படும்.

கரோனா தொற்று உள்ளவா்கள் கடைசி ஒரு மணிநேரத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம். அவா்களுக்குத் தேவையான பிபிஇ கிட் வழங்கப்படும் என்றாா் ஆட்சியா்.

ஸ்கேட்டிங் ஊா்வலம் பெரியகோயில், மேம்பாலம் வழியாக மணிமண்டபத்தில் முடிவடைந்தது. இதில், பங்கேற்ற 40 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழும், மகாத்மாகாந்தி சுய சரிதை நூலும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஏ. பழனி, மகளிா் திட்ட அலுவலா் கதிரேசன், மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன், மாவட்ட ரோலா் ஸ்கேட்டிங் சங்கத் தலைவா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com