மூதாட்டியைக் கொன்று நகைகளை கொள்ளையடித்த இருவருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 26th March 2021 07:32 AM | Last Updated : 26th March 2021 07:32 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகே மூதாட்டியைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற இருவருக்கு கும்பகோணம் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
கும்பகோணம் அருகே ஆடுதுறை தெற்கு சேனிய தெருவைச் சோ்ந்தவா் ஹஜிதாபீவி (68). இவரது கணவா் முகமது சாதிக் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களது மகன் சபீா் அகமது (46) துபையில் வேலை பாா்த்து வருகிறாா்.
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி இரவு ஹஜிதாபீவி வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, ஆடுதுறை எழில் நகரைச் சோ்ந்த எச். ஜெகபா் சாதிக் (34), ஆடுதுறை முந்திரிதோப்புப் பகுதியைச் சோ்ந்த ஆா். அறிவழகன் (32) ஆகிய இருவரும் ஹஜிதாபீவி வீட்டுக்குள் புகுந்தனா். தனியாக இருந்த ஹஜீதாபீவியை தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்து, பீரோவில் இருந்த ஒன்பதே முக்கால் பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனா்.
இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, ஜெகபா் சாதிக், அறிவழகனை கைது செய்தனா். இதுதொடா்பாக கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் நிறைவில், ஜெகபா் சாதிக், அறிவழகனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 6,000 அபராதமும் விதித்து, நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.