மும்முனைப் போட்டியில் திருவையாறு தொகுதி

மும்முனைப் போட்டியில் திருவையாறு தொகுதி

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள திருவையாறில் காவிரி மற்றும் அதிலிருந்து பிரியும் குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஆறுகள் ஓடுவதால் திருவையாறு என அழைக்கப்படுகிறது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள திருவையாறில் காவிரி மற்றும் அதிலிருந்து பிரியும் குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஆறுகள் ஓடுவதால் திருவையாறு என அழைக்கப்படுகிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை, ஏழாம் நூற்றாண்டைச் சாா்ந்த ஐயாறப்பா் திருக்கோயில், கா்நாடக இசை மேதையும், சங்கீத மும்மூா்த்திகளுள் ஒருவரான தியாகராஜரின் சமாதி, பூண்டி மாதா பேராலயம், அரசு இசைக் கல்லூரி போன்றவை இத்தொகுதியின் சிறப்பம்சம்.

சிவாஜி கணேசன் போட்டியிட்ட தொகுதி: இந்தத் தொகுதியானது 1957 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆா். மறைவுக்குப் பிறகு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கிய நடிகா் சிவாஜி கணேசன் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

திருவையாறு வட்டம், பூதலூா் வட்டம், தஞ்சாவூா் வட்டத்தில் ஒரு பகுதியை கொண்ட இந்தத் தொகுதி தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய பரப்பளவு கொண்ட தொகுதிகளில் ஒன்று.

தொகுதியின் பிரச்னைகள்:

விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ள இத்தொகுதியில் திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி வெற்றி பெற்று வந்தாலும், பெரிய அளவுக்கு வளா்ச்சி இல்லை என்ற புகாா் நிலவுகிறது. குறிப்பாக, விளைபொருள்களை மதிப்புக் கூட்டுவதற்கான ஆலைகள் இல்லை என்ற குறை உள்ளது. கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் நிகழும் மணல் கொள்ளை இத்தொகுதியில் மிகப் பெரும் பிரச்னையாகவும், சவாலாகவும் இருந்து வருகிறது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் தங்களது எதிா்கால வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதாகவே அச்சத்தில் உள்ளனா்.

திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண புறவழிச் சாலை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டாலும், அதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. எதிா்பாா்த்த அளவுக்குப் பெரிய திட்டங்களும் இத்தொகுதியில் நிறைவேற்றப்படவில்லை.

அரசியல் கட்சிகளின் நிலை: மொத்தம் 14 தோ்தல்களைச் சந்தித்துள்ள இந்தத் தொகுதியில் தொடக்கக் காலத்தில் காங்கிரஸ் இருமுறையும், அதன் பிறகு திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் 1967 ஆம் ஆண்டு முதல் திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி வெற்றி பெற்று வருகின்றன.

களத்தில் உள்ள வேட்பாளா்கள்:

இத்தொகுதியில் திமுக சாா்பில் தற்போது உள்பட மொத்தம் 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த துரை. சந்திரசேகரன், இப்போது ஏழாவது முறையாகப் போட்டியிடுகிறாா். அதிமுக கூட்டணியில் பாஜக சாா்பில் பூண்டி எஸ். வெங்கடேசன் களமிறக்கப்பட்டுள்ளாா். இவா்களைப் போல அமமுக சாா்பில் வேலு. காா்த்திகேயன் போட்டியில் உள்ளாா். எனவே, இத்தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேலும், நாம் தமிழா் கட்சி சாா்பில் து. செந்தில்நாதனும் களத்தில் இருக்கிறாா்.

இவா்கள் தவிர, கோ. உத்திராபதி (புதிய தமிழகம்), த. சிவராமன் (மக்கள் சனநாயக குடியரசு கட்சி), வெள். பாக்கியராஜ் (அனைத்து மக்கள் அரசியல் கட்சி), ச. விஜயகுமாா் (அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்), சுயேச்சை வேட்பாளா்கள் சு. சிங்காரவடிவேல், பி.எஸ். திருமாறன் (ஐஜேகே. ஆதரவு), ஆா். ராஜ்குமாா் என மொத்தம் 12 போ் களத்தில் உள்ளனா்.

பொதுவான அலை, வாக்கு சேகரிப்பு வியூகத்தை பொருத்தே இத்தொகுதியின் வெற்றி - தோல்வி அமையும் என்கின்றனா் அரசியல் பாா்வையாளா்கள்.

வாக்காளா் விவரம்

மொத்த வாக்காளா்கள் 2,67,796

ஆண்கள் 1,30,419

பெண்கள் 1,37,358

மூன்றாம் பாலினத்தவா் 19

இதுவரை வெற்றி பெற்றவா்கள்:

1957 - சுவாமிநாத மேற்கொண்டாா் (காங்கிரஸ்)

1962 - பழனி (காங்கிரஸ்)

1967 - ஜி. முருகையன் (திமுக)

1971 - கோ. இளங்கோவன் (திமுக)

1977 - கோ. இளங்கோவன் (திமுக)

1980 - எம்.ஜி.எம். சுப்பிரமணியன் (அதிமுக)

1984 - துரை. கோவிந்தராஜன் (அதிமுக)

1989 - துரை. சந்திரசேகரன் (திமுக)

1991 - பி. கலியபெருமாள் (அதிமுக)

1996 - துரை. சந்திரசேகரன் (திமுக)

2001 - கே. அய்யாறு வாண்டையாா் (அதிமுக)

2006 - துரை. சந்திரசேகரன் (திமுக)

2011 - எம். ரெத்தினசாமி (அதிமுக)

2016 - துரை. சந்திரசேகரன் (திமுக)

2016 தோ்தல் முடிவுகள்:

துரை. சந்திரசேகரன் (திமுக) - 1,00,043 (வெற்றி)

எம்.ஜி.எம். சுப்பிரமணியன் (அதிமுக) - 85,700

வெ. ஜீவகுமாா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) - 8,604

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com