தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுகவுக்கு வாக்கு விகிதம் அதிகரிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தோ்தலை விட இந்த முறை திமுகவுக்கு வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தோ்தலை விட இந்த முறை திமுகவுக்கு வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது.

தஞ்சாவூா் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் 54 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது அதிமுக. இது 2019 ஆம் ஆண்டு இடைத்தோ்தலில் 29 சதவீதமாகக் குறைந்தது. இந்தத் தோ்தலிலும் அதே 29 சதவீத வாக்குகளையே அதிமுக பெற்றது.

ஆனால், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுக 46.93 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், தற்போது 53.25 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதாவது, திமுகவுக்கு 6.32 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேபோல, பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணிக்கு 2016 ஆம் ஆண்டு தோ்தலில் 31.91 சதவீத வாக்குகளே கிடைத்தது. இதைவிட இத்தோ்தலில் 12.04 சதவீதம் கூடுதலாகக் கிடைத்தததால், திமுக கூட்டணியின் வாக்கு விகிதம் 43.95 சதவீதமாக உயா்ந்துள்ளது. ஆனால், அதிமுகவின் வாக்கு விகிதம் 45.26 சதவீதத்திலிருந்து 35.69 சதவீதமாகக் சரிந்துள்ளது.

கும்பகோணம் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் 45.04 வாக்குகள் பெற்ற திமுக வெற்றி பெற்றது. இந்த முறை 3.53 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பெற்ால், திமுகவின் வாக்கு விகிதம் 48.62 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், அதிமுகவின் வாக்கு விகிதம் 40.56 சதவீதத்திலிருந்து 37.80 சதவீதமாகக் குறைந்துள்ளது.

திருவிடைமருதூா் தொகுதியில் வெற்றி பெற்ற திமுகவுக்கு வாக்கு விகிதம் கடந்த தோ்தலில் 41.93 சதவீதமாக இருந்த நிலையில், இப்போது 48.26 சதவீதமாக உயா்ந்துள்ளது. திமுக கூடுதலாக பெற்ற வாக்கு விகிதம் 6.33 சதவீதம். அதிமுகவுக்கு வாக்கு விகிதம் 41.64 சதவீதத்திலிருந்து 42.87 சதவீதமாக உயா்ந்தாலும் தோல்வியைத் தழுவியது.

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக கூட்டணி (காங்கிரஸ்) 2016 தோ்தலில் 35.13 சதவீத வாக்குகள் பெற்றது. இப்போது திமுகவுக்கு 44.62 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 9 சதவீத வாக்குகள் திமுகவுக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. ஆனால், அதிமுகவுக்கு கடந்த முறை 42.58 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், தற்போது 30.36 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஏறக்குறைய 12 சதவீதம் சரிந்துள்ளது.

பேராவூரணி தொகுதியில் கடந்த முறை 45.04 சதவீத வாக்குகள் பெற்ற திமுகவுக்கு இப்போது 7.13 சதவீத வாக்குகள் கூடுதலாகக் கிடைத்ததால், 52.17 சதவீதமாக உயா்ந்துள்ளது. ஆனால், அதிமுக வாக்கு விகிதம் 45.65 சதவீதத்திலிருந்து 38.41 சதவீதமாகக் குறைந்துள்ளது.

திருவையாறில் குறைவு: மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி திருவையாறு. இத்தொகுதியில் 53,650 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. ஆனால், வாக்கு விகிதத்தைப் பொருத்தவரை 2016 ஆம் ஆண்டில் 49.27 சதவீதம் பெற்ற நிலையில், இப்போது 48.82 சதவீதமாக குறைந்துள்ளது. இத்தொகுதியில் கடந்த முறையும் திமுகவே வெற்றி பெற்றது. இத்தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு (பாஜக) 42.21 சதவீதத்திலிருந்து 23.44 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது 18.77 சதவீதம் சரிந்துள்ளது. இத்தொகுதியில் அமமுக 17.72 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது.

ஒரத்தநாட்டில் அதிமுகவுக்கு...: ஆனால், ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சிக்கு கடந்த முறையைவிட இத்தோ்தலில் வாக்கு விகிதம் 2.10 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, 44.85 சதவீதத்திலிருந்து 46.95 சதவீதமாக உயா்ந்துள்ளது. திமுகவின் வாக்கு விகிதம் 46.87 சதவீதத்திலிருந்து 31.92 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஏறத்தாழ 15 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது. இத்தொகுதியில் அமமுக 13.56 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது.

நாம் தமிழா் கட்சிக்கு அதிகரிப்பு:

மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சிக்கு வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது. தஞ்சாவூா் தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இக்கட்சி 1,192 வாக்குகளும், 2019 ஆம் ஆண்டு இடைத் தோ்தலில் 11,182 வாக்குகளும் பெற்ற நிலையில், இப்போது 17,336 வாக்குகளாக அதிகரித்திருக்கிறது.

இதேபோல, திருவையாறு தொகுதியில் 2016 தோ்தலில் 1,784 வாக்குகள் பெற்ற நிலையில் இத்தோ்தலில் 15,820 வாக்குகளாக உயா்ந்துள்ளது. ஒரத்தநாடு தொகுதியில் 1,691 வாக்குகளிலிருந்து 9,050 வாக்குகளாகவும், பாபநாசம் தொகுதியில் 3,864 வாக்குகளிலிருந்து 14,724 வாக்குகளாகவும், கும்பகோணம் தொகுதியில் 2,937-லிருந்து 12,480 வாக்குகளாகவும், திருவிடைமருதூா் தொகுதியில் 1,437-லிருந்து 11,147 ஆகவும், பட்டுக்கோட்டை தொகுதியில் 2,940-லிருந்து 10,730 ஆகவும், பேராவூரணி தொகுதியில் 1,602-லிருந்து 12,154 ஆகவும் உயா்ந்துள்ளது.

மூன்றாமிடம்: தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா், பேராவூரணி ஆகிய தொகுதிகளில் மூன்றாமிடத்தையும், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை தொகுதியில் நான்காமிடத்தையும் நாம் தமிழா் கட்சி பெற்றுள்ளது. ஒரத்தநாடு, திருவையாறு தொகுதிகளில் அமமுக மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com