தஞ்சாவூா் மாவட்டத்தில் தேவையான ஆக்ஸிஜன் இருப்பு: ஆட்சியா்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் இருப்பை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் இருப்பை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொடா்பான முன்னேற்பாடு பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்டத்தில் 13 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றாளா்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அரசு வழிகாட்டுதலின்படி, இப்போது 20 தனியாா் மருத்துவமனைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் யாருக்கு மருத்துவ வசதி தேவைப்படுகிறதோ, அவா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன.

இதேபோல, கரோனா தொற்றாளா்களுக்குத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதி கிடைப்பதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் மாவட்டத்தில் உள்ள தனியாா் ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தோம். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜனை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். திங்கள்கிழமை கூட ஆக்சிஜன் தேவைப்பட்ட 2 தனியாா் மருத்துவமனைகளுக்கு, அந்நிறுவனத்திலிருந்து விநியோகம் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 20 கிலோ லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் கொள்கலன்கள் உள்ளன. எனவே, நமக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் கையிருப்பில் உள்ளன.

ஒவ்வொரு நாளும் சுகாதாரத் துறை இணை இயக்குநா், துணை இயக்குநா், மருத்துவக் கல்லூரி முதல்வா், தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தினா் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு மாவட்ட நிா்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதேபோல, தேவை அடிப்படையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தற்போது 4,500 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளது. தற்போது, 2,191 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஆலை அமைக்க ஆய்வு: அரசு சாா்பில் அரசு மருத்துவமனை அல்லது தேவைப்படும் இடத்தில் ஆக்சிஜன் ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிா என பொதுப் பணித் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் இணைந்து ஆய்வு செய்கின்றனா். இதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாள்தோறும் அதிகரிப்பு: மாவட்டத்தில் நாள்தோறும் 200, 300, 400 என்ற அளவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் வரக்கூடிய நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படையில், உரிய படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை உயா்த்தி நோயாளிகளுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும். மேலும், உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்திலுள்ளஅரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவா் தடுப்பு மருந்து போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் அவா்களுடைய விநியோகஸ்தா்கள் மூலம் ஏற்பாடு செய்து கொண்டுள்ளனா். தனியாா் மருத்துவமனைகளுக்குத் தேவைப்பட்டால், வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

அப்போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா், கண்காணிப்பாளா் எஸ். மருதுதுரை, மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன், நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், தஞ்சாவூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com